உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

பக்ராநங்கல் பாரீர்! தாமோதர் திட்டம் காணீர்! சித்தரஞ்சனின் சிறப்பறிவீர்! பிலாய் ரூர்கேலா பெருமை காணீர்!! என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பதினேழாண்டுகள் ஓட்டியாகிவிட்டது, இனியும் ஒட்டிய வயிற்றினருக்கு இந்தப்பட்டியல் அளித்திடுதல் புண்ணிலே புளித்ததைத் தெளித்திடுவது போன்ற செயலாகும். எமக்கு வாழவழி செய்து காட்டுங்கள்! இந்த நன்னாளில் எமது வேண்டுகோள் இதுவே! உணவு! உடை! பிள்ளை குட்டிகள் பிழைத்திருந்து படித்திட வசதி! இவைபோதும், இவற்றினை எமக்கு அளித்திடுக!—என்று கேட்டுள்ளனர். இம்மட்டோடு விட்டார்களில்லை மாதர்கள்.

லால்பகதூரின் கரத்திலே அவர்கள், உடன்பிறப்பாளர் எனும் பரிவுணர்ச்சியுடன் கட்டிய ‘ரட்சை’ இருக்கிறதே, அது புதுவிதமானதாம்! அந்த ரட்சையில் ஒரு குழந்தையின் படம் பொறிக்கப்பட்டிருக்கிறதாம்! அந்தப் படத்திலே

என்னை வாழவிடு!
விலைகளைக் கட்டுப்படுத்து

என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள தாம்!

நிச்சயமாக லால்பகதூரின் நெஞ்சம் நெகிழ்ந்துதான் இருக்கும். படிப்போருக்கே நெகிழ்கிறதே.

முதலாளிகள் கேட்கிறார்கள் லால்பகதூரை; புதிய புதிய யந்திரங்கள் வாங்கிட அன்னியச் செலாவணி உரிமை கொடுங்கள் என்று.

தொழிலதிபர்கள் கேட்கின்றனர், எமக்குக் கடன் கொடுங்கள், வட்டியின்றி அல்லது மிகக் குறைந்த விகிதத்தில் என்று.

குழந்தை கேட்கிறது, என்னை வாழவிடு! விலைகளைக் கட்டுப்படுத்து!! என்று.

புதிய மாளிகை கட்ட இரும்புக் கம்பங்களும் ‘டன் டன்னாக’ச் சிமிட்டியும் தருக, உடனே—என்று கேட்டிடும் பணம் படைத்தான்கள் உளர்—லால் பகதூர் கண்டதுண்டு,

சென்ற ஆண்டு கிடைத்ததைவிட இவ்வாண்டு கிடைத்த இலாபம் குறைவாக இருக்கிறது; இந்த நஷ்டத்-