உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

என்ற ‘கோஷமிட்டபடி’ இந்தியத் தூதரக அலுவலர்களும் துரைத்தன மேலதிகாரிகளும் பல்வேறு நாடுகள் சென்றபடி உள்ளனர்.

கேட்டோம், தருகிறார்கள்!
வருகிறது உணவுப் பண்டம் கப்பல் கப்பலாக!

என்று துரைத்தனம் அறிவிப்பது எதற்காக? அச்சம் கொள்ளாதீர், கவலை காட்டாதீர் என்று கேட்டுக் கொள்ளவன்றோ.

உணவு உற்பத்தி பெருகிவருகிறது! விளைச்சலின் தரம் மிகுந்திருக்கிறது என்று முன்பு பேசிய பேச்செல்லாம் பொய்த்துப் போச்சே.

எத்தனை காலத்துக்கு உணவுப் பொருளுக்காக வெளிநாட்டை நம்பிக்கிடப்பது—வேதனையாக இருக்கிறது—வெட்கமாகக்கூட இருக்கிறது—இனி அந்தப் பழக்கத்தை விட்டொழிக்கத் திட்டமிட்டுவிட்டோம்—வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருளை வாங்கமாட்டோம் என்று முழக்கிய உறுதிமொழிகள் உயிரற்றனவாகிவிட்டனவே.

இப்போது அமெரிக்கா அனுப்புகிறது; பாகிஸ்தான் விற்றிருக்கிறது; தாய்லாந்துக்கு ஆட்கள் போகிறார்கள் அரிசி வாங்க என்று செய்திகளைச் சர்க்காரே தந்தபடி உள்ளனர்.

ஒரு பெரிய பஞ்சம், பெருவெள்ளம், அல்லது மழையே பெய்யாத நிலை, நிலநடுக்கம் எனும் ஏதேனும் ஓர் இயற்கைக் கோளாறு ஏற்பட்டு, ஒரு நாடு சோற்றுக்குத் திண்டாடும்போதும் பெரும்போரிலே சிக்கி வயல்களின் பசுமை காய்ந்து போய்விடும் போதும் வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களைக் கேட்டுப் பெறுவது முறை, நியாயம். ஆனால், அவ்விதமான இயற்கைக் கேடுகளோ, மூட்டிவிடப்பட்ட போரோ ஏதுமின்றியே, நாம், உணவுப் பொருளுக்காக, அமெரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து எனும் பல நாடுகளிடம் தஞ்சம் அடைகிற போது, உதவி பெறுகிறபோது, இங்கு இந்த நிலைமை ஏற்படக் காரணமாக இருந்த அரசிடம் மதிப்பா பிறந்திடும்? அனுப்புகிறார்கள் உணவுப்பொருள்...ஆனால், அவைகளை அனுப்பும்போது எத்தகைய கேலிப் புன்னகை எழுந்ததோ யார் கண்டார்கள்!