உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

கிறதே—படமாக மட்டுமே உளது எனினும்—அதனையும் மிஞ்சுவதாக உளது. நான் பிழைப்பதும் மடிவதும், ஆட்சிப்பொறுப்பின் முதல்வரே! உமது கரத்தில் இருக்கிறது. என்ன செய்து என்னை வாழ வைத்திடுவது. என்று எண்ணி வாட்டம் கொள்ளவேண்டாம், நானே சொல்கிறேன் தக்க வழிதனை; விலைகளைக் கட்டுப் படுத்துங்கள், நான் பிழைத்துக் கொள்வேன் என்றன்றோ குழந்தை கூறுவதாகத் தெரிகிறது ‘ரட்சை’யில் பொறித்துள்ள வாசகத்தைப் பொருள் பிரித்துப் பார்த்திடும்போது.

எந்த ஒரு ஆட்சியும் இந்த நிலை வந்துளது என்பதனைக் கண்டு கண் கசியாதிருந்திட முடியாது. அதிலும் குடும்பம் நடாத்தி, ஆங்குக் குமுறலும் கொதிப்பும், பசித்தீயினால் பதைப்பும், பிணிக் கொடுமையால் வேதனையும் கிளம்பிடுவதைக் கண்டு மனக் கலக்கம் கொண்டு பழக்கம் பெற்றுள்ள எவருக்கும் கண் கசிந்திடாதிருந்திட முடியாது.

இல்லை! இல்லை! மிகைப்படுத்திக் கூறுகிறார்கள்; உணவு நிலைமை அப்படியொன்றும் மோசமாக இல்லை, விலைகள் ஓரளவு ஏறி இருக்கிறது என்றாலும், பெரிய நெருக்கடி ஏதும் ஏற்பட்டு விடவில்லை என்று இங்கு நாட்டின் நாயகர்கள் பேசுகின்றனர்—எதிர்ப்புக் குரலையும் ஏக்கப் பேச்சினையும் மறுத்திடவும் மறைத்திடவும்.

இலண்டனில் உள்ள இதழ்—இந்திய சர்க்காரிடம் ஆதரவு காட்டும் இதழ்—எழுதுகிறது.

சீனப்படையெடுப்பின்போது எத்தகைய நெருக்கடி நிலை இருந்ததோ, அதுபோன்றதோர் நெருக்கடி நிலைமை உணவு முனையிலே இன்று இந்தியாவில் ஏற்பட்டுவிட்டிருக்கிறது

என்று. இதனையும் லால்பகதூரின் அரசு மறுத்திடும்; ஆனால், வார்த்தைகள் மறுப்புரைக்குமே தவிர, இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதனைக் காட்டுகின்றன? நெருக்கடி நிலை இல்லாமலா,

கோதுமை! கோதுமை! மேலும் மேலும் கோதுமை!

அரிசி! அரிசி! மேலும் சிறிதளவு அரிசி!