105
செஸ்டர்பவுல்ஸ். துறைமுகத்தில் பண்டங்களை இறக்க.......என்று இழுத்துப் பேசுகிறது இந்தியப் பேரரசு. அதற்கான வழிமுறை கூற, உடனிருந்து உதவ நிபுணர்களையும் அமெரிக்காவிலிருந்து தருவிக்கிறேன் என்று கூறுகிறார் செஸ்டர்பவுல்ஸ்.
தம்பி! ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்—அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள் இங்கு வருவதை நான் குறை கூறவில்லை—அதுவும் இல்லையென்றால் உணவு நெருக்கடி பேராபத்தை மூட்டிவிடும். இந்நிலையில், உணவுப் பொருளை இனாமாகவோ கடனுக்கோ, பண்ட மாற்றுக்கோ பணம் பெற்றுக் கொண்டோ கொடுத்துதவுவோர் பலப் பல இலட்சக்கணக்கானவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறவர்கள் ஆகிறார்கள்—அனைவரின் நன்றிக்கும் உரித்தானவர்களாகிறார்கள்; இதனை நான் மறந்திடவுமில்லை, மறுத்திடவுமில்லை; ஆனால், 17 ஆண்டு ஆட்சி நடாத்திய பிறகு. இந்த நிலையைத்தானா நாடு பெறவேண்டும், காங்கிரசின் மூலம் என்று கேட்கிறேன்.
தம்பி! ரேவுத் துறையிலே மூட்டைகளை எப்படி, விரைவாக, இலகுவாக இறக்குவது என்பதற்கு அமெரிக்க நிபுணர்கள் வருகிறார்கள் என்று கூறினேனல்லவா! வருகிற நிபுணர்கள் இந்தத் துறைக்காக மட்டுமல்ல, என்னென்ன துறைகளுக்கு, நிபுணர்கள் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்தபடி இருக்கிறார்கள், சொல்லவா! கேலிக்காக அல்ல, நாடும், அதற்கு அமைந்துள்ள ஆட்சி முறையும் இருக்கிற இலட்சணத்தைத் தெரிந்து கொள்ளச் செய்வதற்காக.
விவசாயிகளுக்குக் கட்டுபடியாகக் கூடிய விலையைக் கண்டறிந்து நிர்ணயம் செய்ய அமெரிக்காவிலிருந்து ஒரு நிபுணர் குழு வருகிறது; தாங்களாக அல்ல; சர்க்காரின் விசேஷ அழைப்பின் பேரில்.
மண் வளம் பெருக்க, பாசன முறையைத் தரமானதாக்க, வடிகால் பிரச்சினையை விளக்கிட, ஒரு நிபுணர் குழு—அமெரிக்காவிலிருந்து; பயிர் கெடுக்கும் பூச்சிகளை அழித்திட, பூச்சி மருந்தை விமான மூலம் தெளித்திட, முறைகூற, உடனிருந்து உதவி செய்ய ஒரு அமெரிக்க நிபுணர் குழு வருகிறது.