128
வார் எவரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு, மண்டைக்கனம் கொண்டுவிட்டனவோ! வலிய வம்புக்கு இழுக்கின்றனவே! விடக்கூடாது இந்தத் தவளைகளை!! என்று எண்ணி, ஒருபடை திரட்டிக்கொண்டு கிளம்பி, தவளைகள் கூச்சலிடும் குளம்குட்டை ஓரம் நின்று நாமும் கூச்சலிடுவோம், உரத்த குரலில்; ஓயாமல்! நமது குரலொலி தமது குரலொலியைவிடப் பயங்கரமான அளவு உளது என்பதனை, இந்தப் புத்திகெட்ட தவளைகள் உணரட்டும்; உணர்ந்து வெட்கத்தால் வாயடைத்துப் போகட்டும் என்று கூறிக்கொண்டு, அதனையே போர்முறையாக்கிக் கொண்டு, கூவும்படையாகிக் கூச்சல் கிளப்பிடுவார் உண்டோ!! இல்லை! ஆளுக்கொரு கல்வீசித் தவளைகளைக் கொன்று போடுவோம் என்று கிளம்பிடுவார் உண்டோ! இல்லை என்பாய், பொதுவாக, அதுபோல் செய்திட ஒரு திட்டம் போட்டுக்கொள்வார் இல்லை. ஆனால், பிரான்சு நாட்டிலே இவ்விதமான வேலைத்திட்டம் இருந்தது. புரட்சிக்கு முன்பு. ஆமாம், தம்பி! வேடிக்கை அல்ல நான் கூறுவது; வரலாற்றிலிருந்து எடுத்தளிக்கும் துணுக்கு, சீமான்கள் கொட்டமடித்துக் கொண்டிருந்த நாட்கள்! சாவு வரவில்லையே, சர்வேசா! என்று ஏழைகள் அழுது கிடந்தகாலம். தவளைகள் கூச்சல் கிளப்புவதால் சீமானின் தூக்கம் கெடுமல்லவா? சீமானின் தூக்கம் கெட்டால், உடம்பு என்னாவது! அவன் உடம்பு போனால் நாட்டின் உயிர் எப்படி இருக்கும்!! இவ்விதமான எண்ணம் அரசியல் கருத்தாக இருந்துவந்த காலமது. அப்போது இரவுக் காலங்களில், சீமான் பஞ்சணையில் படுத்திடுவான்; காடு கழனியாக்குபவர்கள், கல்லும் தடியும்கொண்டு தவளைகளைத் தாக்கியபடி இருப்பராம், இரவெல்லாம்; கூச்சலிடும் தவளைகளைக் கொல்வராம். இது, சீமானின் தூக்கத்துக்கான பாதுகாப்புப் படை! என்ன தருவார் சீமான்? என்றா கேட்கிறாய்! கொல்லாமல் விட்டுவைத்திருக்கிறாரே, போதாதா!!
செருக்குமிக்க சீமான்கள் காலத்துப் படைபோன்றதோர் படை இதுபோது எங்கேனும் அமைந்துளதோ, அதுபற்றியோ அண்ணா! நீ கூறுவது என்று கேட்கிறாய். இல்லை, தம்பி! இல்லை! நான் குறிப்பிடும் படை, சீமான் அமைத்தது அல்ல; சீமான்களுக்காகவும் அல்ல! ஏழைகளுக்கு இதம் செய்ய ஏழை பங்காளர் அமைத்த படை!!