உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

எது அது என்கிறாய். பொறு. கூறுகிறேன்; கூறுமுன் வேறோர் படை ஒன்று காட்டுகிறேன்.

தஞ்சைத் தரணி! அதனை வடபுலத்து முஸ்லீம் மன்னர் படை தாக்க வருகிறது: பாய்ந்து வருகிறது. பெரும்படை—போரிடுவதிலே ஆற்றல் மிகக் கொண்ட படை.

தஞ்சை மன்னன் கைகட்டி வாய்பொத்தி இருப்பானோ! நாடு காத்திடும் கடமை உணர்ச்சி அற்றவனோ மன்னன்!!

கை ஒலி எழுப்பினான், எதிர்வந்து நின்றனர் ஏவலர். கட்டளையிட்டான். கடுகிச் சென்றனர் நிறைவேற்ற.

படையொன்று கிளம்பிற்று; பறித்திட, ஒடித்திட, குவித்திட, வீசிட, பரப்பிட!

எதிரிகளைக் கண்டதுண்டமாக்கி வீசிட, அவர்களின் படைக்கலன்களைப் பறித்திட, வாட்களை ஒடித்திட, தஞ்சை மன்னனின் கட்டளை பெற்ற படை முனைந்தது என்று எண்ணுகின்றாய்.

தம்பி! ஒடித்தனர் பறித்தனர். வீசினர்!! ஆனால், எதிரிப்படையினரை அல்ல — பகைவர்களை அல்ல. காடென வளர்ந்திருந்த துளசிச் செடிகளை!!

ஏன்? என்கிறாய். மறுகணம் எண்ணிக் கொள்கிறாய், எதிரி அறியாவண்ணம் பாய்ந்து சென்று தாக்கிடப் புது வழி அமைக்கின்றனர் போலும், அதற்கே காடழித்துப் பாதை போடுகின்றனர் என்றெண்ணிக் கொள்கின்றாய். அது அல்ல நடந்தது. துளசிச்செடிகளைப் பறித்தெடுத்துச் சென்று எதிரிப்படை நுழையும் பாதையிலே வீசிடுக! பரப்பிடுக! துளசியைக் காலால் மிதித்துக்கொண்டு வருவது ‘மகாபாபம்!’ இதனை உணர்ந்து பகைப்படை வந்தவழியே திரும்பிப் போய்விடும்!! இது மன்னன் கட்டளை—போர்முறை.

இதனை நான் வரலாற்றுச் செய்தி என்று கொண்டிடவுமில்லை கூறிடவுமில்லை. அந்த நாள் நிலையினைக் காட்டிடக் கட்டிவிடப்பட்ட கதை என்றே கொள்கின்றேன்; ஆனால், கருத்தே அற்றது இது என்று தள்ளிட

அ.க.—9