உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

உள்துறை அமைச்சர் இந்த நந்தா. நல்லெண்ணம் மிகக்கொண்டவர், நாணயமானவர் என்கிறார்கள். சமூகக் கேடுகளைக் களைந்தாக வேண்டும் என்ற உறுதி கொண்டவர்; சூள் உரைத்துச் சுறுசுறுப்பாகப் பணியாற்ற முனைந்திருக்கிறார். அதற்காக அவரை எவரும் பாராட்டுவர். நோக்கம் நேர்த்தியானது! ஆனால், முறை? துளசி அல்லவா கொட்டச் சொல்கிறார் பகைவர் நுழையும் பாதையில்! சட்டம், போலீஸ் ஆகியவைகளின் கண்களில் மண்ணைத் தூவிடும் கைதேர்ந்தவர்களைக் கண்டறிந்திட, காவி கட்டிய ஜெபமாலைகளை அல்லவா ஏவுகிறார். வேண்டும் வேண்டும் பெரும் பொருள் வேண்டும்! பிறர் பொருள் எனினும் பிழையிலை, வேண்டும்! உழைத்திடாமலே பொருள் குவித்திட உண்டு பல வழி, அனைத்தையும் அறிவோம்! என்று கூறிடும் கொடியவர்களை அடக்க, பணம் ஆட்கொல்லி! பாபச் சின்னம்! வாழ்வு மாயை! ஓர் வஞ்சக வலை! உலகு மாயை, அழியத்தக்கது, அழியாதது ஒன்று உண்டு, அது அங்கே! நிர்மலமான ஆகாயத்தை நோக்கு, நீசத்தனமிக்க உலகை நம்பாதே!! என்ற உபதேசம் பெற்றும் கொடுத்தும், கட்டற்று, கவலையற்று, காசு பணம் வேண்டும் என்ற அவசியமற்று, காலைக் கட்டிக்கொண்டு அழும் மனைவியும், காகூவெனக் கூவி அழும் குழந்தைகளும், கடன்பட்ட நெஞ்சமும் கொண்டிடாத காவிக் கோமான்கள் தானா கிடைத்தார்கள்! துளசி வீசுகிறாரே நந்தா, பகைவன் நுழையும் பாதையில்!!

சாதுக்களைக் கண்டதும் காலில் வீழ்ந்திட, கன்னத்தில் போட்டுக்கொள்ள, வரம் கேட்டிட, சமாராதனை நடத்திட, இன்றும் இங்கு நிரம்பப்பேர் உள்ளனர்—இல்லை என்று கூறிடவில்லை. அதிலும் வடக்கே உள்ள சாதுக்கள் ஒரு படை அளவு உள்ளனர்—படை வீரர் போன்ற கட்டுடலும் இருக்கிறது; பார்த்துமிருக்கிறேன்.

தம்பி! அரித்துவாரத்தில் பார்த்தேன், அழகிய கங்கைக்கரை ஓரம் முழுவதும், அரண்மனைகளோ என்று வியந்திடத்தக்கதான மடங்கள்—சாதுக்களுக்கு. எத்தனை சாதுக்கள் எத்தனை நாட்களுக்கு, என்னென்ன கேட்டாலும் தந்திட, வழிபட்டிட, அங்கு ஏற்பாடுகளைச் செய்துவைத்துள்ளனர் சீமான்கள், சிற்றரசர்கள், வணிகக் கோமான்கள், வாழ்வுக்கலை வல்லவர்கள்! மாலை வேளையில், இந்தச் சாதுக்கள், ஒரு கவலையுமற்று—