உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

(இந்த உலகம்பற்றிய கவலை) உலவுகிறார்கள். ஒரு சமயம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கவலை மேலுலகம் பற்றியதாக இருக்கலாம்-மேலுலகில் இங்கு உள்ளது போன்ற ஏற்பாடுகள் உண்டோ இல்லையோ என்ற கவலை.

கோதுமையும், நெய்யும், சர்க்கரையும், பருப்பும், பாலும் பழமும் கிடைக்கிறது ஒவ்வொரு வேளையும். பரமனைப்பற்றிய தியானத்தில் ஈடுபடுகிறார்கள். ஏன் முடியாது!! பசிப்புலி அடக்கப்பட்டதும், புண்ணியம் பற்றிய நினைப்பு சுரக்கிறது. சாதுக்கள்போல ‘சம்சாரிகள்’ இருக்க முடிகிறதா! பாலுக்குச் சர்க்கரை கூட அல்ல, கூழுக்கு உப்பு போதுமான அளவு இல்லையே என்ற கவலை குடையும்போது, சாதுவாக இருக்க முடிவதில்லை, சாமான்யர்களால்—கோபம் தாபம், குமுறல் கொதிப்பு, பகை பயம், அடிமைத்தனம் அக்கிரம நினைப்பு எல்லாம் குடிபுகுந்து விடுகின்றன—போக்கிரியாகிறான், திருடனாகிறான், வெறியனாகிறான், வெகுண்டெழுகிறான், சாதுவாக இருக்க முடிவதில்லை. சாதுவின் வாழ்க்கை நிம்மதியாக இருப்பதற்கான பொறுப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதால், சாது சாதுவாக இருந்திட முடிகிறது. வாழ்ந்திட வழி அமைத்துக் கொடுத்திட வேறு சிலர் பொறுப்பேற்றுக் கொள்வதனால், இவர்கள், வாழ்வு என்றால் என்ன? அது உண்மையா, மாயையா? இவ்வுலக வாழ்வு நித்தியமா அநித்யமா? என்பன பற்றிச் சிந்திக்கவும்—சிரவணம் செய்யவும் முடிகிறது.

இந்த நிலையிலேயும், சாதுக்கள் சாதுத்தன்மையை விட்டு வெகுதூரம் விலகி, காமக்குரோத மதமாச்சரியங்களால் ஆட்டுவிக்கப்படும் வெறித்தன்மை கொண்டு விடுவது பற்றிய செய்திகளும் அடிக்கடி வெளிவருகின்றன.

பெரியசாமிக்கு விஷம்கொடுத்த சின்னசாமி, பீடத்தைப் பெயர்த்தெடுத்த சாமி, பெண்ணைக் கடத்திச் சென்ற சாமி, மண்ணில் பொன்னை மறைத்த சாமி, மரக்கறி உணவை மறுத்த சாமி, கரியைப் பொன்னாய் ஆக்கும் சாமி, காளியை ஏவல் கொள்ளும் சாமி, காட்டு மாளிகை கட்டிடும் சாமி, கன்னியர் கலங்கிட நடந்திடும் சாமி, கோர்ட்டு வாசலில் இருந்திடும் சாமி, கொடுத்ததை மறைத்திடும் குட்டிச் சாமி, கிருமிக்கூடாய் ஆகிடும் சாமி என்று எத்தனை எத்தனையோ வகையினர் உளர்.