உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159

முப்புரம் கடலிருக்கிறது. ஆனால், கப்பல் வாணிபம் தேவைப்படும் அளவு இல்லை; மிகமிகக் குறைவு என்கின்றனர்.

இரும்பு கிடக்கிறது புதைந்து. ஆனால், எஃகு ஆலை தான் அமைக்கப்படவில்லை என்கின்றார்கள்.

கத்தும் கடல்சூழ்ந்த இடம் இது; எனினும், மீன்பிடி தொழிலும் வளரக்காணோம் என்கின்றார்கள்,

பொது அறிவு வளம் மிக்கவர் இவர் என்கிறார்கள். எனினும், புத்தறிவு பெற்றிடவில்லை என்று கூறுகிறார்கள்.

விழி உண்டு பார்வை இல்லை; வாயுண்டு பேசும் திறனில்லை; வளமுண்டு, வாழ்வு இல்லை; இதுபோல, நம் நாடு பற்றிப் பேசிடக் கேட்கின்றோம்.

ஏன் இந்த நிலை? எதனால் இம்முரண்பாடு? எவர் செய்த செயலால் இந்தச் சீரழிவு? என்பதனைக் கண்டறிய வேண்டாமோ? வளரவேண்டிய முறையிலும் அளவிலும் பயிர் வளரவில்லை என்றதும் உழவன், தம்பி! என்னென்ன எண்ணுகிறான்? என்னென்ன கேட்கின்றனர் அவனை, பூமிநாதர்கள்!!

நாடுமுழுவதிலும் இன்று உள்ளதோர் நலிவுநிலை குறித்து, காரணம் கண்டறிய, கேடுகளைந்திட, நலம் விளைவித்திட நன்முயற்சியில் ஈடுபட வேண்டாமோ? இல்லையே, அந்த நன்முயற்சியும், ஒருவரிருவர், சிறு குழுவினர் மேற்கொண்டால் பலன் மிகுந்திராது, கிடைப்பதும் அவர்க்கு மட்டுமன்றோ போய்ச் சேரும்? நாடு வளம் பெற, பெற்றவளம் அனைவருக்கும் பயன்பட, பயன்படும் முறையை எவரும் பாழாக்காதிருந்திட, தனித் தனியாக முயற்சி செய்யப்படுவது, வளர்ந்து விட்டுள்ள சமுதாயத்திலே முடியாததாகும். இதற்கான முயற்சியினை மேற்கொள்ள வேண்டுவது, அரசு.

அரசு, தம்பி ! அமைந்து விடுவது அல்ல. நாம் அமைப்பது. அரசு நடாத்துவோரும், இதற்கென்று எங்கிருந்தோ எல்லாவிதமான ஆற்றலையும் பெற்றுக் கொண்டு இங்கு வந்தவர்கள் அல்லர்; நம்மில் சிலர், நமக்காக, நம்மாலே நமைஆள அமர்த்தப்பட்டவர்.