உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

பொருள் என்ன? விதைக்கேற்ற விளைவு! அரசு அமைத்திடும் திறம் நமக்கு எவ்விதம் உளதோ அதற்கு ஏற்பவே அரசு! எனவே, நாட்டு வளம்காண அரசு முயற்சியில் ஈடுபடல் வேண்டும் என்று கூறிவிட்டு, நாம் கைகட்டி வாய்பொத்திக் கிடந்திடின் பயன் இல்லை; நல்லரசு அமைத்திடும் முயற்சியினைத் திறம்பட மேற்கொண்டு அதிலே நாம் வெற்றி பெற்றிடல் வேண்டும். உழவன் பற்ற வெற்றிகளன்றோ உன்னைச் சுற்றி இன்று! செந்நெலும், காயும் கனிவகையும், உண்பனவும் உடுப்பனவும், பூசுவனவும் பூண்பனவும்!! அவன் பெற்ற வெற்றிக்காக எத்துணை உழைப்பினை நல்கினான், நாடு முழுவதும் வளம்பெற, ஓர் நல்லரசு அமைத்திட வேண்டுமே, அந்தப் பணிக்காக நாம் எத்தனை அளவு உழைத்துள்ளோம்? அதுகுறித்து நம்மக்கள் எந்த அளவு தமது சிந்தனையைச் செலவிடுகின்றனர்? சிந்தனையில் எந்த அளவு தெளிவு பெற்றுள்ளனர்? தெளிவு பெற்றிடத்தக்க நிலையில், எத்தனை பேர்களுக்கு வாழ்க்கை அமைந்திருக்கிறது? எண்ணிப் பார்த்திடும்போது தம்பி! ஏக்கம் மேலிடும். ஆனால், ஏக்கம் மேலிட்டு ஏதும் செய்ய இயலா நிலையினராகிவிடின் நாடு காடாகும்; மக்கள் பேசிடும் மாக்களாவர். எனவே, அந்த ஏக்கம், நம்மைச் செயல்புரிய வைத்திடும் வலிவாக மாறிடவேண்டும்; மாற்றிட வேண்டும். உலகிலே பல்வேறு நாடுகளில், இடர்ப்பட்ட மக்கள், இழிவு நிலையினில் தள்ளப்பட்ட மக்கள், துக்கத்தால் துளைக்கப்பட்டு, ஏக்கத்தால் தாக்கப்பட்டு, இதயம் வெந்து, இடுப்பொடிந்து ஏதும் செய்ய இயலாத நிலையினராகி விட்டவர்போக, சிலர் - மிகச்சிலர் - துணிந்து எழுந்தனர், எதிர்த்து நின்றனர், வெற்றி கண்டனர். பெருமூச்சிலிருந்து புன்னகை பிறந்தது! சிறைக் கோட்டங்களிலிருந்து மக்களாட்சி மன்றங்கள் அமைந்தன. வெட்டுண்ட தலைகளிலிருந்து கொட்டிய இரத்தத் துளிகள், கொடுமையை வெட்டி வீழ்த்தும் கூர்வாளாயின!

இதுபோல் ஆகும் என்பதனை அன்றே உணர்ந்து உரைத்தார் பொய்யா மொழியார்.

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்

என்பதாக. கொடுமைக்கு ஆளான மக்கள் கொட்டிய கண்ணீர், ஆதிக்கக் கோட்டைகளைத் தூளாக்கிடும் வெடிகுண்டுகளாயின. வரலாறு காட்டுகிறது, வல்லூறை