உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

வெறியர்கள்..., விடுதலைக் கிளர்ச்சியைத் துவக்கிய நாட்களில்.

இங்கு நம்மிடையே உள்ளோரில் சிலர் இந்தி ஆட்சி மொழியானால் என்ன என்று கேட்கும் போது, தம்பி! எனக்கு அந்தப் பழைய நிகழ்ச்சிதான் நினைவிற்கு வருகிறது. உடலிலேயே தான் நோய் தங்கி இருந்து, உடன் இருந்தே கொல்லுகிறது; பாசி, குளத்திலேயே தான் உண்டாகிறது; களை, வயலிலேயேதான் முளைக்கிறது. காட்டிக் கொடுப்போரும் அது போன்றே நமது சமுதாயத்திலேயே உள்ளனர், மினுமினுப்புடன், மிடுக்குடன், துரைத்தனத்தாரின் மேய்ப்புத் தேய்ப்புப் பெற்று!! காட்டுக்குதிரைக்கு ஏது, தங்கமுலாம் பூசப்பட்ட கடிவாளம்? இல்லையல்லவா! நாட்டிலே, பூட்டுவார்கள் விலையுயர்ந்த கடிவாளம் குதிரைக்கு. எதற்கு? நாம் ஏறிச் செல்லும் வண்டியை அக்குதிரை இழுத்துச் செல்ல வேண்டுமே! காண்போர் எப்படிப்பட்ட விலை உயர்ந்த குதிரை என்று கண்டு, அதனை உடையவரைப் பாராட்ட வேண்டுமே... அதற்காக! அதுபோல, தமிழரில் சிலர் உளர்.

தம்பி! மொழிப் பிரச்சினைபற்றி நான் குறிப்பிட்டதற்குக் காரணம் இந்த ஆட்சி, எப்படி யெப்படி ஆதிக்கத்தைப் புகுத்துகிறது என்பதனை எடுத்துக் காட்டிட மட்டுமல்ல; வித்தகர்களின் பேச்சுக்கும் மக்களின் மனக் குமுறலுக்கும் ஒரு துளியும் மதிப்பளிக்காத மமதை கொண்டதாக இருக்கிறதே இந்த அரசு, இவர்களிடமிருந்து எவர்தான் எந்த நியாயத்தைத்தான் எதிர்பார்த்திட முடியும்!... என்பது குறித்து எண்ணிடும் போது ஏற்படக்கூடிய திகைப்பையும் எடுத்துக்காட்டத்தான்.

தம்பி! அதோ காண்கிறாயே, கொதி வந்ததும். சோற்றைப்பார்க்கிறார்கள்; அரிசி, சோறாகி இருக்கிறது. அரிசிதானே! அதனுடன் கலந்த கல்லுமா? இல்லையே! கல் கல்லாகவே தான் இருக்கிறது, எத்தனை தீ அதனைத் தாக்கிடினும். வேகக்கூடியதைத்தான் வெந்திடச் செய்யலாம். அடுக்களை எடுத்துக்காட்டும் இந்தப் பாடம் அரசியலுக்கும் பொருந்தக் கூடியதே. இந்த பானை, வேகும் பண்டம் கொண்டதல்ல, இது வெந்து சுவை தரும் பண்டமாகும் என்று எத்தனை நேரம்