உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167

நெருப்பை எரியவிட்டாலும் வீணாகித்தான் போகும், என்பது. எனவே இந்த வேகாச்சரக்கை எடுத்து வீசி விட்டு வேறுகொள்ளவேண்டும். இன்றுள்ள போக்குடனும் இயல்புடனும் இவ்வரசு இருந்துவருமானால் நாம் இருக்க விட்டு வைத்திருப்போமானால் — எந்த ஒரு பிரச்சினைக்கும், சிக்கு நீக்கப்பட்டு மக்கள் மகிழத்தக்க ‘பரிகாரம்’ கிடைத்திடாது.

உணவுப் பிரச்சினை, விலைஏற்றப் பிரச்சினை, தொழில்வளம் சீராக அமையும் பிரச்சினை, வறுமையை ஓட்டும் பிரச்சினை, உரிமைப் பிரச்சினை எனும் எதுவாக இருப்பினும், ஒரு ஆணவம், ஒரு அலட்சியப் போக்கு, எல்லாம் எமக்குத் தெரியும் என்ற முடுக்கு, எவர் எம்மை என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு, இவைதான் தலைவிரித்தாடுகின்றன. இதனை ஒவ்வொன்றிலும் பார்க்கிறோம் தம்பி! இலங்கைவாழ் மக்களைக் காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தமும், பர்மாவாழ் மக்களைப் பதைக்கப் பதைக்க அந்த அரசு இங்கு ஓட்டிவிட்டதனைப் பார்த்துக் கொண்டு சிறுவிரலையும் அசைக்காது இருக்கும் போக்கும் எதனைக் காட்டுகின்றன? இந்த அரசு மக்களின் நலன்களை, உரிமையினை, வாழ்வை, துச்சமென்று கருதிக் துவைத்திடும் இருப்புக்கால் கொண்டது என்பதைத்தானே!!

இந்நிலையுள்ள ஓர் அரசு, நான் குறிப்பிட்டுள்ள முறைப்படி இயற்கைப் பொருளை நுண்ணறிவுடன் விஞ்ஞான முறைப்படி பயன்படுத்திச் செல்வம் பெருகிடச் செய்து, பெருகிடும் செல்வத்தை அனைவரும் சீராகப் பெற்று, இல்லாமை, போதாமை எனும் கேடு களையப் பெற்று, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடத்தக்க புது முறையை, பொற்காலத்தை அமைத்திடவா முனையும்! வீண், அந்த எண்ணம். அதற்கு ஏற்றது இந்த அரசு அல்ல! சாறு, கரும்பில் கிடைக்கும்! மூங்கிற் கழியில் கிடைத்திடுமோ!

இதனை இன்று உணர்ந்து, சமுதாயத்தின் அழுக்குகளும் இழுக்குகளும் நீக்கப்படத்தக்கதான முறை கண்டு நடாத்தும் ஓர் அரசு அமைத்திடும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஓடப்பர் உயரப்பர் எனச் சமுதாயம் பிளவுபட்டிருக்கும் நிலையை மாற்றிடவேண்டும், எல்லோரும் ஒப்பப்பர் ஆகிடவேண்டும் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,