உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171

இங்கோ, அந்த முனையில் பணியாற்றத் துணிபவனை, பாரதப் பண்பாட்டை அழிப்பவன், பக்தி நெறியைப் பழிப்பவன் என்றெல்லாம் ஏசிப் பேசிடக் கிளம்புகின்றனர்.

1873-ம் ஆண்டு பிறந்தவர் ஆங்கிலக் கவிஞர் ஜான்மேஸ்பீல்டு என்பார். சங்கத்தில் பயின்று, சீமான்களின் அரவணைப்புப் பெற்றுக் கவி பாடி அரங்கேற்றினவர் அல்ல! கப்பலில் கூலி வேலை செய்துவந்தவர். மற்றும் பல கடினமான உழைப்புகளைச் செய்து பிழைத்து வந்தவர்—அவர் “நான் கவி பாடுவேன்; யாருக்காக? ஏழைக்காக!” என்ற கருத்துப்பட ஒரு கவிதை இயற்றினார். அன்று இருந்த அறிவாளர்களிடையேயே அக்கவிதை புரட்சியை மூட்டிவிட்டது என்கிறார்கள்.

எவரைப் பற்றிப் பாடப் போவதில்லை என்பதனை முதலிலேயே தெரிவித்து விடுகிறார் மேஸ்பீல்டு:

வாழ்வின் சுவை தன்னை
வகையாய்ப் பல்லாண்டு
உண்டு உடல் பெருத்து
ஊழியர் புடைசூழத்
தண்டு தளவாடமுடன்
தார் அணிந்து தேரேறும்
அரசகுமாரர், அருளதிபர்
தமைக் குறித்து அல்ல!

புலவர் கவிபாடுகிறார் என்றால், அது, மன்னனை அல்லது அருளாளனைப் புகழ, போற்றத்தானே இருக்க முடியும் என்ற எண்ணம் அழுத்தமாக இருந்திருக்கிறது. 1873-ம் ஆண்டல்லவா! அதை அறிந்து, மேஸ்பீல்டு நான் உங்களுக்குப் பழக்கமான கவிஞன் அல்ல, நான் புதுமைக் கவிஞன்—நான் மன்னனைப் பற்றியுமல்ல, தேவாலயத்து அதிபனைப்பற்றியும் அல்ல பாடப் போவது!!—என்று தெரிவிக்கிறார்.

“அரசகுமாரர்
அருளாலய அதிபர்
தமைக்குறித்து அல்ல!

என்ற துவக்கமே, துணிவு நிரம்பியது. கவிவாணர்கள் நெடுங்காலமாகப் பாடிக்கொண்டு வந்த முறையை