56
விட்டதும், தன்னாலே ஒரு எண்ணம், பலருக்கு வந்து விடுகிறது—நம்மால்தான் முடியும்—நம்மால் மட்டுந்தான் முடியும்—நம்மாலன்றி வேறெவராலும் முடியாது—நம்மைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?—என்ற எண்ணம்.
இந்த எண்ணம், ஒருவிதமான எதேச்சாதிகார மனப்போக்கை வளரச் செய்துவிடும்—அதன் விளைவு—உலகிலேயே தன்னைவிடத் தகுதியும் திறமையும் படைத்தவர்கள் ஒருவரும் இல்லை என்ற நினைப்பு—அந்த நினைப்பு தடித்திடத் தடித்திட, வேறு எவரோ இருக்கிறார்களாம் தகுதியுடன் என்ற பேச்சு கேட்டதும் ஒரு ஏளனம், பிறகு கோபம், பிறகு திகைப்பு, திகில்! இறுதியில் கசப்பு, குமட்டல்!! ஏற்பட்டுவிடுகிறது.
நாமே எதற்கும்! நாமே என்றென்றும்! நாமே எவரையும்விட!—என்ற மனப்போக்கு, அரசியலில், முறை எதுவாக இருப்பினும், சர்வாதிகாரத்தை மூட்டி விடும்
முடிமன்னனுமில்லை, படையுடையோன் ஆட்சியும் இல்லை, இது மக்கள் ஆட்சி என்று விருது கூறிய படியே, ஆட்சியில் அமர்ந்துவிட்ட கட்சி, ‘ஒரே கட்சி’ ஆட்சியை அமைத்து, இதுவே உண்மையான ஜனநாயகம் என்று பேசுவது அறிவாயல்லவா? எகிப்திலே நாசர்! மற்றவர்கள் பற்றி நினைவுபடுத்திக்கொள்வதா, கடினம்?
பத்து நாட்களுக்கு முன்பு, கெனியா நாட்டு முதலமைச்சராகியுள்ள ஜோமோ கெனியாடா கூறிவிட்டார், கெனியாவில் ஒரே கட்சி ஆட்சி முறை ஏற்படுத்த எண்ணுகிறேன் என்று. கனா நாட்டில், என் க்ருமா! இவர்களுக்கெல்லாம் என்ன எண்ணம்?
நாமே சகல தகுதியும் திறமையும் பெற்றிருக்கிறோம்.
நம்மை விட்டால் வேறு எவரும் இல்லை. இதே முறையில் காங்கிரஸ் தலைவர்களின் போக்கு செல்கிறது என்பதைக் காட்டுவதுதான்,
எதிர்க்கட்சி என்றாலே ஒரு எரிச்சல்.