81
தம்பி! கெய்ரான் விஷயமாக தாஸ் கமிஷன் அறிக்கை வெளிவந்ததே, இது முதலாவது என்றும் எண்ணிவிடாதே. இதற்கு முன்பு வேறோர் காங்கிரஸ் தலைவரின் பேரில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக் குழு அமைக்கப்பட்டது; அறிக்கை கொடுத்தார் விவியன் போஸ்; அந்தக் காங்கிரஸ் தலைவர் பேரில் கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் ஆதாரமுள்ளவை என்பதாக. என்ன நடந்தது? அந்தக் காங்கிரஸ் தலைவர் அவர் வகித்திருந்த பதவியினின்றும் விலகிக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டார்! ஆனால், காங்கிரசில் இருக்கிறார்; நீக்கப்படவில்லை!
அதற்கும் முன்னால் அடிபட்ட முந்திரா விவகாரத்தை மறந்துவிட்டிருக்கமாட்டாய் அந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தி, அந்த நிகழ்ச்சியிலே டி. டி. கிருஷ்ணமாச்சாரியாருக்கு இருந்த தொடர்பு குறித்துக் கருத்து தெரிவிக்கையில், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் வாதம், பேச்சு, ஒப்புக்கொள்ளத் தக்கதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. என்ன நடந்தது அதன் விளைவாக? டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், தாமாகப் பதவி துறந்தார்.
இன்று டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் இந்தியாவின் நிதி மந்திரியாகக் கொலுவீற்றிருக்கிறார்.
முந்திரா விவகாரம் பற்றி விசாரணை நடத்திய சக்ளா இந்தியாவின கல்வி மந்திரியாக வீற்றிருக்கிறார்.
சக்ளாவை விடப் பெரிய அந்தஸ்து, அமைச்சர் அவையில் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாருக்கு! என்ன பாடம் இதிலிருந்து தெரிகிறது என்று, நேர்மை பட்டுப்போகாத பழைய காங்கிரஸ்காரரைப் பார்த்துக் கேள், தம்பி! பெருமூச்சுதான் பதிலாகக் கிடைக்கும்.
எம்முடைய ஆட்சியிலாவது ஊழல் நடப்பதாவது! என்று எக்காளமிட்டு வந்தார்கள். ஒவ்வொன்றாக வெடித்துக்கொண்டு வெளியே வருகிறது. இதனைக்கண்டு பிடிக்க ஒரு குழுவே அமைக்கப்பட வேண்டி நேரிட்டு விட்டது.
பாஞ்சாலத்தோடு நின்றுவிடவில்லை, ‘பாரத புத்திரர்’ என்ற பட்டயம் பெற்றுக்கொண்டு பகற்கொள்ளை அடிப்பவர்களின் கதை; படலம் படலமாக வெளிவந்தபடி இருக்கிறது!