உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

மேடையிலே நாம் இந்தப் பதினேழு ஆண்டு ஆட்சியிலே காணக் கிடைக்கும் கேடுபாடுகளை விளக்கிக் காட்டுகிறோம்.

இதனை மறுத்திட முடிவதில்லை காங்கிரஸ் தலைவர்களால்; மறுத்திட முன்வருபவர்கள், தங்களைப் பேச்சாளர்கள் ஆக்கிக் கொள்வதிலே மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். மக்களின் இதயத்தைப் பெறுவதிலே அல்ல.

இந்த முறையினால் மட்டுமே வெற்றி கிட்டிவிடாது என்று உணர்ந்துள்ள, ஊர் அறிந்தவர்கள் கிளம்புகிறார்கள், தனித்தனியே சந்திக்க, தித்திப்புப் பேச்சுத்தந்திட, மனக்குறையைப் போக்கிட! அதிலே நல்ல வெற்றி கிடைக்கிறது.

நாட்டாண்மைக்காரர் இருக்கிறார், ஊரூருக்கும். அவரும், நாம் நடத்தும் கூட்டத்திற்கு வந்திருந்து நாம் காட்டும் காரணங்களைக் கேட்டு, உண்மையை உணர்ந்துவிட்டிருக்கிறார் என்று நாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால், உண்மை என்ன? நாட்டாண்மைக்காரர் கூட்டத்திற்கு வருவதுமில்லை! கூட்டத்திற்கு வந்து நாம் சொன்னவைகளைக் கேட்டுச் சென்றவர்களும் அவரிடம் சென்று விளக்கம் கூறுவதில்லை.

இந்த நாட்டாண்மைக்காரரின் பேச்சை மீறி நடந்து கொள்ளும் இயல்பு, கிராமப்புறங்களில் அதிக அளவு இன்னமும் தென்படவில்லை, அரும்பு இருக்கிறது. சில இடங்களில் கருகிய மொட்டுக்களாகி விட்டதையும் நான் கண்டிருக்கிறேன்.

அரசியல் கட்சிகளிடம் ஈடுபாடு கொண்டு, நாட்டு நிலைமைகளை அறிந்து, அந்த நிலைமைகளைத் தக்க முறையில் திருத்தி அமைக்கவேண்டும் என்ற உரிமையும் கடமையும் தமக்கு உண்டு என்று உணர்ந்து செயல்படுவோர்களைப் போலவே, கிராமத்துத் தலைவர்கள் இருந்துவருவார்கள் என்று எண்ணிக்கொள்வது சரியல்ல; அப்படி எண்ணிக்கொண்டு கணக்குப்போடும் போதுதான், போட்ட கணக்குப் பொய்த்துப் போய்விடுகிறது.

அ.க 2—7