98
ரூபாயின் மதிப்புக் குறைந்துவிட்டது...எனும் உண்மை விளக்கப்படும்போது அதற்குக் காரணமாக உள்ள ஆட்சியிடமும் அந்த ஆட்சியை நடத்தும் கட்சியிடமும் விவரமறிந்தவர்களுக்கு எரிச்சல் வருகிறது; அந்தக் கட்சிக்குத் தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.
ஆனால், ரூபாயின் மதிப்புக் குறைந்துவிட்டதே என்ற கவலையில் அல்ல; வரவர கிராமத்திலே அவனவன் அவன் இச்சைப்படி நடந்து கொள்கிறான்; பெரியவர்கள் நாட்டாண்மைக்காரர்கள் ஆகியோரின் பேச்சின்படி நடப்பதில்லை என்ற கோபமும், தனது மதிப்புக் குறைந்து விடுகிறதே என்ற கவலையும் கிராமத்துத் தலைவருக்கு.
அவருடைய ‘அரசியல்’, நாடு அறிந்த அரசியலோடு முழுக்க முழுக்கத் தொடர்பு கொண்ட தல்ல.
சுட்டுத் தள்ளுகிறார்களாம் என்று கேள்விப்படும் போது அவருடைய மனம் பதறத்தான் செய்கிறது, அத்தகையவர்கள் ஆட்சியில் இருக்கக்கூடாது என்றுதான் எண்ணுகிறார், ஒரு கணம். மறுகணமோ நாலுபேர் நடத்திய பஞ்சாயத்திலே ஒப்புக்கொண்டு போன குப்பன் அதன்படி நடக்கவில்லையே என்ற கவலை அவரைப் பிடித்துக்கொள்கிறது.
அந்தக் கவலையின் முன்பு நாட்டை வாட்டிடும் அரசியல் பிரச்சினைகள் மங்கி விடுகின்றன.
இந்த மனப்போக்கு மாற்றப்பட வேண்டும்; இது வெறும் மேடைப் பேச்சினால் மட்டும் மாறிவிடாது; கிராமத்துடன் நமது கழகத் தோழர்கள் தொடர்ந்து, நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலமாகவே, நிலைமையையும் நினைப்பையும் மாற்றிட முடியும்.
தர்மபுரியில் நான் கேள்விப்பட்டேன். ஒரு கிராமத்தில் முக்கியமானவரைக் காங்கிரஸ் தலைவர்கள் தமது பக்கம் சேர்த்து கொண்டார்கள் என்று.
யார் அந்தக் கிராமத்துப் பெரியவர்? என்று நான் கேட்டேன். மந்திரிக் கவுண்டர் என்று சொன்னார்கள்.