108
ஆலை:– என்ன வியாக்யானமோ! என்ன தத்துவமோ! புலியிலே புலி இது புதுப்புலி! சைவப்புலி! என்கிறீர்கள். போகட்டும், இப்போது என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்?
மண்:– உங்கள் தரத்துக்குத் தக்கபடி; எங்கள் தேவைக்கு ஏற்றபடி...
ஆலை:– உங்கள் தேவை நாளுக்குநாள் வளரும்; நாங்கள் என்ன செய்வது? உங்களிடம் கண்டிப்பு இல்லை; உங்கள் கட்சியிலேயே சிலபேர் கண்டபடி பேசுகிறார்கள், முதலாளிகளின் மனம் புண்படும்படி. கொள்ளைக்காரனை நடத்துவதுபோல் நடத்துகிறீர்கள்—காட்டு கணக்கு என்கிறீர்கள்—பூட்டு கடையை என்கிறீர்கள்—நீட்டு நோட்டுகளை என்கிறீர்கள்.
மண்:– அப்படி ஒன்றும் நடக்காது. முன்பு ஏதாவது நடந்திருந்தாலும் இனி நடக்காது. இப்போதே டி. டி. கே. போட்டுள்ள புதிய திட்டத்தைப் பார்த்தீர்களல்லவா? கறுப்புப் பணத்தில் ஒரு பகுதியைச் சர்க்காருக்குக் கொடுத்துவிட்டால், மற்றதற்குக் கணக்கு வழக்கு இல்லை என்று கூறிவிட்டார்...
ஆலை:– கறுப்புப்பணம் உள்ளவர்களுக்கு அது சலுகையாக இருக்கலாம். என்னிடம் ஏது?
மண்:– நான் சொன்னேனா? சொல்லுவேனா? எதிர்க்கட்சிக்காரர்கள் தான் அப்படிப் பேசி ஏசுகிறார்கள். இந்தக் காங்கிரஸ் சர்க்கார் கள்ளமார்க்கட்காரரிடம் சரணாகதி அடைந்துவிட்டது என்கிறார்கள். இதைப் பொதுமக்கள் புரிந்துகொண்டார்கள்; அதனால் இந்தத் தடவை காங்கிரசுக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று பேசுகிறார்கள். இந்தத் தடவை, காங்கிரஸ் தோற்றுவிட்டால், கள்ள மார்க்கட்டுக்காரருக் குக் காங்கிரஸ் கட்சி உடந்தையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மை என்று ஆகிவிடும் ஆகவே, அந்த விதமான பழி விழாதிருக்கவும், முதலாளிகளைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டமிடுபவர்கள் ஆதிக்கம் பெறாதபடி தடுக்கவும், காங்கிரஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.