110
மண்டலம்:– நீங்கள் நினைப்பது தவறு. கூடிக்குலவி முதலாளிகளை ஒழித்துக்கட்டும் தந்திரமான திட்டமல்லவா காங்கிரஸ் மேற்கொண்டிருப்பது.
மு:– கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது என்பார்களே, அப்படி இருக்கிறது உங்கள் போக்கு...
ம:– அப்படியானால் முதலாளிகளை அடியோடு ஒழித்து விடவேண்டும் என்கிறீர்களா? சரி, செய்வோம். அதற்குக் காங்கிரசு வெற்றி பெற்றால்தானே...
மு:– முதலாளியை ஒழிக்க, காங்கிரஸ் வேட்பாளராக ஒரு முதலாளியையே நிறுத்துவதா...வெட்கக் கேடு...
ம:– என்ன செய்வது? காங்கிரசுக்கோ எதிர்ப்பு அதிகமாகிவிட்டிருக்கிறது. பணம் நிறையத் தேவை. பணம் செலவழிக்கக்கூடிய ஆசாமியாகப் பார்த்துப் போட்டால் தானே...
மு:– தன் பணத்தால்தான் காங்கிரஸ் வெற்றிபெற்றது என்ற நினைப்பில், அந்த முதலாளி மேலும் இறுமாப்புடன் நடந்துகொள்வாரே!
ம:– எப்படி முடியும்! எத்தனை பணம் இருந்தாலும், நம் போன்றவர்களின் உதவியில்லாமல் வெற்றி கிடைக்காது என்பது தெரியாதா அவருக்கு?
மு:– அவருக்கு நம்முடைய கொள்கையில் நம்பிக்கை இல்லை; நமக்கு அவருடைய குணத்தில் வெறுப்பே இருக்கிறது. ஆனாலும் தேர்தலுக்காக ஒரு உறவு வைத்துக்கொள்கிறோம், முறையா! கூடா நட்புக் கேடாய் முடியும் என்பார்களே...
ம:– தேர்தலுக்காக இவரைப் பிடித்து இழுத்துப் போட்டு வைத்திருக்கிறோம், அவ்வளவுதானே. திட்டம் போடுவது, கொள்கை தீட்டுவது இவரா!!
மு:– கொள்கை, திட்டம் இவைகளைத் தீட்டும் நிலையில் உள்ள தலைவர்கள் மட்டும் என்ன இலட்சணத்தில் இருக்கிறார்கள்! ஒரே குளறுபடி! மொரார்ஜி வலது சாரி, மேனன் இடதுசாரி, மாளவியா தீவிரவாதி என்று இப்படித் திக்குக்கு ஒருவராக இருக்கிறார்கள். ஒருமித்த கருத்து இல்லையே...