உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

ம:– எந்தக் கருத்துக்குப் பெரிய ஆதரவு கிடைக்கும் தெரியுமோ, நம்மைப் போன்ற முற்போக்காளரின் கருத்துக்குத்தான்...!

மு:– முற்போக்காளர் முகாமில்தானா தாங்களும்......! முற்போக்கு, இனி ஒரு முழக்கயிறு தேடிக் கொள்ள வேண்டியதுதான்! துணிந்து சொல்கிறீரே, உம்மை முற்போக்காளர் என்று...ஒரு தேர்திருவிழா பாக்கி கிடையாது, ஆலமரத்தடி கிளி ஜோதிடனிலே இருந்து நாடி ஜோதிடர் வரை தேடி அலைகிறீர், முற்போக்காளர் என்று வேறு சொல்லிக் கொள்கிறீர்.

ம:– அதிலே எல்லாம் எனக்கு நம்பிக்கை இருப்பதாக எண்ணிக்கொள்கிறீர்! அப்படித்தானே! அது தான் தவறு...!

மு:– நம்பிக்கை இல்லாமலா, ஆடி அடங்கிய சாமியாருக்கு அன்னாபிஷேகம் செய்து அவர் காலைக் கழுவி அந்தத் தண்ணீரைப் பருகினீர்—போன வாரம்...?

ம:– பைத்யம்! பைத்யம்! ஆடி அடங்கிய சாமியாருடைய அற்புதத்திலே நம்பிக்கையா எனக்கு! நான் என்ன மடையனா, அப்படிப்பட்ட மூட நம்பிக்கை கொள்ள. ஆடி அடங்கிய சாமியாரிடம் சொக்கிக் கிடக்கும் மக்கள் ஊரிலே நிறையப் பேர், தெரியுமா! சாமியார் ஒருவார்த்தை சொன்னால் போதும், அந்தப் பக்தர்கள் ஓட்டு அவ்வளவும் நமக்குத்தான். அதற்காக, அவருடைய பக்தனாக ஒரு நாள் இருந்தேன். என்னுடைய உண்மையான நோக்கத்தைத் தெரிந்துகொள்ளாமல், பேசுகிறீர்...

மு:– அப்படியானால், பேய், பூதம், பிசாசு, மோட்சம், நரகம், முன்வினை, மறுஜென்மம், சடங்கு சம்பிரதாயம், மாயமந்திரம், புராணம், இதிகாசம் இவைகளைப் பற்றிய நம்பிக்கை உமக்குக் கிடையாது என்று சொல்லும்......

ம:– சொல்ல வேறு வேண்டுமா—ஐயா! என் தலைமையிலே தான் பெரியார் கூட்டம் நடந்தது. அன்றைக்கு விளாசினார் பாருங்க இராமாயணத்தைப் பற்றி, அடே அப்பா! அவ்வளவு பிரமாதம்.