உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

மு:– அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தது எனக்குத் தெரியாது. ஆனால், ஆரண்யபுரம் என்ற ஊரில் கோதண்டராமசுவாமி கோயிலில், பட்டாபிஷேகத் திருவிழாவிலே முக்கிய பங்கு உங்களுடையது என்று பேப்பர்லே பார்த்தேன்.

ம:– ஆமாம்! போட்டோ கூடப் போட்டிருந்தாங்களே. ஆனால், உம்மிடம் சொல்லிவைக்கிறேன், ஏன் போனேன் அந்தப் பட்டாபிஷேகத்துக்கு? ஆரண்யபுரம் வட்டத்திலே மட்டும் ஆறு ஆயிரம் ஓட்டு! புரியுதா! அங்கே என்னைப் பட்டாபிஷேக வைபவத்திலே கண்டதிலே எவ்வளவோ மகிழ்ச்சி, நம்பிக்கை, அந்த ஊராருக்கு...

மு:– அவர்களை ஏமாற்றினீர் என்றுதானே பொருள்?

ம:– அவ்வளவு பச்சையாகச் சொல்லலாமா...இது ஜனநாயகக் காலமாச்சே...

மு:– நான் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவதற்குச் சம்மதித்தாலும் இராமாயண பாரதத்தை நம்பும் பைத்யக்காரத்தனத்தைக் கண்டிக்காமல் இருக்க மாட்டேன்...

ம:– உங்களைக் கட்டுப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. அந்தப் பயமே வேண்டாம்...காங்கிரசுக்குள்ளேயே மூடநம்பிக்கை ஒழிப்புமுனை என்று ஒரு அமைப்பு வைத்துக் கொள்ளுங்கள்...யார் தடுக்க முடியும்...

மு:– அப்படியா...பகுத்தறிவுப் பாசறையும் ஏற்படுத்திக் கொள்ளலாமா...

ம:– தாராளமாக! இப்போது சமதர்மமுனை என்று ஒன்று வேலை செய்கிறதே, காங்கிரசிலே தெரியாதா...

மு:– என்ன நோக்கத்துடன்...?

ம:– காங்கிரஸ் சமதர்ம திட்டத்தைச் சரிவர, மும்முரமாக நடத்தவேண்டும் என்று வற்புறுத்த, சமீபத்திலே மகாநாடுகூட நடத்தது....

மு:– யாரார் போயிருந்தார்கள் அந்த மகாநாட்டுக்கு...

ம:– ஏன்! நம்ம காமராஜரே போயிருந்தார்...