58
எண்ணற்ற நிகழ்ச்சிகள் பொருத்தமுடன் இணைக்கப்பட்டுள்ள மொத்த வடிவத்தைக் கொண்டுதான் இராமாயணத்தின் பொருளைத் தெரிந்து கொள்ளலாமேயன்றி, இராமாயணத்தில் வெவ்வேறு இடத்தில் உள்ளவைகளில் சிற்சில துண்டுகளைக்கல்லி எடுத்துவைத்துக் கொண்டு, ‘பார்த்தனையா இராமாயணம்’ என்றா பேசுவார்கள்? அதுபோல இந்தப் பெரியவர் என் பேச்சிலே தொடர்புதனை இவராக அறுத்துவிட்டு, துண்டு துணுக்குகளைத் தூக்கி வைத்துக் கொண்டு, இதுதான் அண்ணாதுரை சொன்னது! இதுதான் அவருடைய கருத்து! என்றா பேசுவது? இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து கொண்டா! வெட்கமாக இருக்கிறது நம்மவர் இப்படிப் பேசுகிறாரே என்று இவருக்கு மெத்தவேண்டியவர்களே என்னிடம் கூறும்போது.
என்னைக் கண்டிக்க, கேலிபேச, அவருக்கு உரிமையும் இருக்கிறது; வசதி நிரம்ப, வாய்ப்பும் அதிகம் நிலையை எடுத்துக்கொண்டாலும், அவர் எதுவும் பேசலாம். ஆனால், அதற்காக இவ்வளவு வழுக்கி விடுவதா! இந்தி ஆட்சிமொழி இல்லை என்று சர்க்கார் அறிவித்து விட்டு, அது இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என்ற திட்டமும் கூறாமல், அதனைக் கட்டாயம் படித்தாகவேண்டும் என்றும் சட்டம் போடாமல், இந்தி பரப்புவதற்காகச் சர்க்கார் பணமும் செலவழிக்காமல் இருந்தால் இந்தி பரவிட உமது உதவி கிடைக்குமா என்ற கருத்துப்பட — லால்பகதூர் அல்ல — நந்தா அல்ல—பாராளுமன்றத்தில் அல்ல—பத்திரிகை நிருபர் ஒருவர்—நிருபர்கள் மாநாட்டில் கேட்டிருக்கிறார். அவருடைய கேள்வி, சவால் விடுகிற முறையில் இருந்தது. நானே பதில் கூறும்போது, நான் அந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறேன் என்ற முன்னுரையுடன் பேசி இருக்கிறேன்—இதனை நான் விளக்குவதற்கு முன்பே ‘இந்து’ பத்திரிகை விளக்கமாக்கி இருக்கிறது—இவ்வளவுக்கும் பிறகு முதலமைச்சர் என்மீது தமது கேலிப் பேச்சை வீசுவது முறை அல்ல! அதனால் எனக்கு எந்த இழுக்கும் வந்துவிடாது. இவரைபற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக்கொள்வார்கள்; பேசிக் கொள்கிறார்கள்.
யாராவது ஒருவர் என்னிடம்வந்து, ‘அண்ணாதுரை! வா! வா! இந்தி பரப்பிட வா!’ என்று அழைத்தால் என்ன சொல்வேன் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர்.