உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

நிபந்தனைகளைக் கூறாமல், என் சவாலின் இறுதிப் பகுதியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு பேசுகிறார். நான் என்ன சொல்லி அவருக்கு விஷயத்தை விளங்க வைப்பேன்? அறியாதவர்களுக்குச் சொல்லலாம்; அறிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு எப்படிச் சொல்வது! எதைச் சொல்வது! இப்படித்தானா இவர் என்று எண்ணிக் கொண்டு வேறு பயனுள்ள காரியத்தைக் கவனிக்கச் செல்லவேண்டியதுதான்! ஓணானின் முதுகுக் கூனை நிமிர்த்திட மருத்துவமனையா அமைக்க முடியும்!!

இதோ தண்டபாணி தேசிகர்! இவர் மெச்சிடும் விதமான பாடகி ஆக்கிடுவதாகச் சொன்னாயே! எங்கே அந்தப் பெண்! பாடச் சொல்லு!!—என்று கேட்டுக் கொண்டு, ஊமைப் பெண்ணை நீ பேச வைத்தால், நான் பாட வைக்கிறேன் என்று சொன்னதில் முதல் நிபந்தனையை நிறைவேற்றாமல், இறுதி நிபந்தனையைத் தூக்கிக் காட்டினால், என்ன பொருள்! ஊமைப் பெண் பேசட்டும், பேசச்செய்—பிறகு பாடுவாள்—பாடவைக்கிறேன் என்றுதானே பதில் தரவேண்டும். அவ்விதமான பதிலை நான் தரவேண்டிய நிலைமையை உண்டாக்குகிறார், என் பேச்சிலே உள்ள இணைப்பைக்கழற்றிவிட்டுக் கையில் கிடைத்ததை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு பேசும் ‘கனம்’ பக்தவத்சலம் அவர்கள்!

ஒருவருக்கொருவர் நடத்திக்கொள்ளும் வாக்குவாதத்தில், முழுவதையும்—தொடர்பாக உள்ளது அவ்வளவையும் எடுத்துப் பார்த்து, பொருளும் பொருத்தமும் காண வேண்டுமேயன்றி, ஒரு துண்டு மட்டும் தூக்கி வைத்துக் கொண்டு இதற்கென்ன பொருள் என்றா கேட்பது?

இராமன் சீதையைக் கரம் பற்றினான்.
அனுமாரின் வாலில் தீ பற்றிக் கொண்டது.
தசரதன் கீழே வீழ்ந்து மடிந்தான்,
மான் மாயமாக மறைந்தது
சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தனர்.
ஆ! பிராணநாதா! என்று சீதாதேவி அலறினாள்.
சேடிகள் சிரித்து மகிழ்ந்தனர்,
வில்லை எடுத்தான்; விரிந்தது; ஒடிந்தது.

இவை எல்லாம் உள்ளன இராமாயணத்தில்; ஆனால், ஒவ்வொன்று ஒவ்வோரிடத்தில், ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு பொருத்தம், இணைப்பு; இவ்விதமாக உள்ள