உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

வெற்றி வெறி தலைக்கேறிய அந்தத் தருக்கர்களும், தம்மை எதிர்த்து நிற்பார் இல்லை என்பதைக் களம் பலவற்றில் கண்டு கண்டு இறுமாந்து, தமக்கு இந்த ஆற்றலை ஆண்டவன் அளித்திருப்பது, அதனைக் கொண்டு இந்த அவனியை அஞ்சிட வைத்திடவும். அடக்கி ஆண்டிடவுமே என்றுகூடக் கருதினர்,

ஆண்டவனே அனுப்பிவைத்த அழிவாயுதம் என்று தமக்குத் தாமே விருதும் சூட்டிக்கொண்டனர் அந்தக் கொடியவர்கள்,

இப்போதுதான் எடுத்துக் காட்டப்படுகிறது: அவர்களிடம் இருந்து வந்த படைகளின் தன்மையும், அவர்கள் கையாண்ட போர்முறையும், அவர்கள் காட்டிய வேகமும் துணிவுமே அவர்களைக் கண்டோர் மருண்டிடத்தக்க, கேட்டோர் கிலிகொள்ளத்தக்க வெற்றிகளைப் பெற்றிடச் செய்தது என்பதனை.

நெடுங்காலத்துக்குப் பிறகுதான், எவ்வளவோ நாசத்துக்குப் பிறகுதான், அவ்விதமான அழிவுச் சக்தியை எப்படித் தடுத்து நிறுத்துவது, எப்படி எதிர்த்து ஒழிப்பது என்ற போர் முறையை வகுத்திடவும், வெற்றி காணவும் முடிந்தது. அந்தக் கட்டம் பிறந்திடும் வரையில் அந்தக் கொடியவர்கள், எவராலும் தோற்கடிக்கப்பட முடியாத மாவீரர்கள் என்று கூறிக்கொள்ள முடிந்தது.

உலகை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டானல்லவா இட்லர்! சென்ற இடமெங்கும் வெற்றி என்றனர்! சேதி சொல்லி அனுப்பினால்போதும், சரண் அடைய நாடுகள் காத்திருந்தனவே.

அவனை வெல்வார் இல்லை! என்று உலகே பேசிற்று. எதுவரையில்? அவனை வீழ்த்துவதற்கான முறை செம்மைப் படுத்தப்படும் வரையில்,

கொன்று குவித்திடும் கொடுமை நிரம்பிய களம் நின்றவர்களின் இறுதியே, தோல்வி என்றாகிவிட்டது என்கிறபோது, ஆயிரத்தெட்டுத் தந்திரங்களின் துணை கொண்டு, அரசியல் ஆதிக்கத்தைப் பெற்றுவிடும் ஒரு கட்சி, என்றென்றும் வல்லமைமிக்கது, வீழ்த்தப்பட முடியாதது என்ற நிலையில் இருந்துவிடும் என்று பேதையும் கூறிடான். கொடுமைகளைத் தாங்கித் தத்தளித்த