76
போர்முறை, அதிலே ஒரு நெறி; ஆயுதமற்றவர்களைத் தாக்காதிருக்கும் பண்பு; பெண்டிரிடமும் குழந்தைகளிடமும் பச்சாத்தாபம் காட்டும் உணர்வு; சொத்துக்களை நாசமாக்காதிருக்கும் முறை எனும் எதற்கும் அவர்கள் கட்டுப்படுவதில்லை. எதையும் நாசம் செய்வது, வதைப்பது, வாட்டி எடுப்பது, அதிலே மக்கள் துடிதுடிப்பது கண்டு மகிழ்வது, இப்படி அவர்கள்.
அவர்களின் வெறித்தனத்தை இன்று கண்டிக்கிறோம்; வரலாற்றுச் சுவடிகள் அவர்களை நடமாடிய நாசம் என்று குறிக்கின்றன. ஆனால், அவர்கள் படைபலமும் போர்வெறியும் காட்டி நாடு நகரங்களை அழித்தும், மக்களைக் கொன்று குவித்தும் நாசத்தை மூட்டிவிட்ட போது அவர்களின் செயலைக் கண்டிக்க முடியவில்லை. கண்டிப்பவனின் நாக்கு துண்டாடப்பட்டுவிடும்.
அவர்களைக் கண்டிக்காதது மட்டுமல்ல, அவர்கள் பெற்ற வெற்றிகளைக் கொண்டாட விழாக்கள்! கோலாகலப் பவனிகள் நடைபெற்றன!
ஒருபுறத்தில் அக்கொடியவர்கள் வெட்டி வீழ்த்திய உடலங்கள் குவியல் குவியலாக; மற்றோர்புறத்திலே அந்த மாபாவிகளின் கொலு!
அது மட்டுமல்ல! அந்த அக்கிரமக்காரர்களின் வெறித்தனத்தை வீரம் என்றும், படுகொலைகளை வெற்றிகளென்றும் கூறிட வேண்டிய கொடுமைக்கும் சிலர் ஆளாக்கப்பட்டனர். கவிதைகளை இயற்றித்தந்தனர் சிலர்! அவர்களின் கொடுஞ்செயல்களைக் காவியமாக்கித் தந்தனராம் சிலர்! அதற்காகவே சிலர், அந்த வெறியர்களால் அமர்த்தப்பட்டிருந்தனராம்.
அவர்களின் ‘காலம்’ முடிந்த பிறகே, அவர்களின் செயல் எத்துணைக் கொடுமை நிரம்பியது என்பதனைக் கூறிட முடிந்தது. அவர்களின் ஆதிக்கம் இருந்து வந்த போது, புகழாரம் சூட்டிடவும் வேண்டி நேரிட்டது, புண்பட்ட நெஞ்சினரால்! தமது புலமையை அந்தக் கொடியவர்களுக்குப் பலி கொடுத்திட வேண்டியும் நேரிட்டதாம்!
கொடுமைகளை எதிர்த்து ஒழித்திட முடியாத நிலையில் பலர் அதற்கு இரையாகிவிடுவதுடன், சிலர் அந்தக் கொடுமையைக் கொடுமை என்று கூறிடவும் முடியாத நிலையினராகிக் குமுறிக் கிடந்திடுவதுண்டு.