உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காஞ்சிக் கடிதம்: 15

இதயம் வென்றிட...1



காந்தியார் காங்கிரசும் ஆளுங்கட்சிக் காங்கிரசும்
இழந்தது சரிகைத் தொப்பி; பெற்றதோ மந்திரி வேலை!
மக்களின் இதயத்தை வென்றிடும் தன்மை மட்டும்
              போதாது கழகத்துக்கு!

தம்பி,

இரத்த ஆறு ஓடும்-பிணமலை குவியும்-வீடுகள் தீக்கிரையாகும்-வயல்கள் கருகும்-எங்கும் அல்லோலகல்லோலம்-அமளி-அழிவு,

காட்டுத்தீப் போல, கட்டுக்கு அடங்காத பெருவெள்ளம் போல, நெருப்பைக்கக்கும் எரிமலையின் குமுறல்போல, செங்கிஸ்கான், தைமூர், அட்டில்லா போன்ற வெறிபிடித்தலைந்தவர்கள் அவனியில் நடமாடி அழிவை ஏவியபோது, நிலைமை இருந்தது.

அவர்களின் படைகள் பாய்ந்து வருகின்றன என்றால் ஒரே பீதி! எதிர்த்து நிற்க முடிவதில்லை; தடுத்திட முடிவதில்லை! அழிவு! அழிவு! பெரும் அழிவு! எதிர்ப்பட்டதெல்லாம் அழிக்கப்படும்! வாள்! வேல்! ஈட்டி! இவைமட்டுமல்ல, நெருப்பு, விஷம், சித்திரவதைக் கருவிகள் இவைகளையும் கொண்டுதான் அந்த வெறியர் போர் நடத்தினர்.