85
“என்ன ஏகப்பட்ட ஆட்டம் போடுகிறானாமே! கேட்டு விட்டுவா, சொத்தை ஏலத்துக்குக் கொண்டுவரவா என்பதை.”
என்று இவ்விதமாக மிரட்டித் திரியும் பேர்களைக் காணலாம் தேர்தல் காலத்தில்.
★
மற்றச் சமயத்தில் இதயம் பேசும்-தேர்தல் சமயத்தில் இதயம் தூங்கிவிடும் அளவுக்கு மயக்க மூட்டும் காரியம் நடைபெறும். அதைச் செய்திட வல்லவர்கள் இருக்கிறார்கள்.
மக்களின் இதயம் நமது பக்கம், ஆகவே, தேர்தலில் வெற்றி நமது பக்கந்தான் என்று எண்ணுவது இயற்கை; வாதம் நியாயமானது. ஆனால், தேர்தல் நேரத்தில் நீதியைக்கூடச் சாய்த்துவிடத்தக்க வல்லவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.
கட்சியின் சிறப்பு, கொள்கையின் தூய்மை, வேட்பாளரின் திறமை என்பவைகளைக் காட்டி ஆதரவு திரட்டுவது மேடைகளில், நம்முடைய முறை.
வீட்டுக்குள்ளே உட்கார்ந்து முன்பின் தொடர்பு பற்றிப் பேசி, இன்னாருக்கு இன்னார் வேண்டியவர். இதைச் செய்தால் இது கிடைக்கும் என்பதுபற்றி விளக்கி,
எனக்காக இதைச் செய்யவேண்டும். இதைச் செய்தால் இன்ன பயன் உண்டு, இதைச் செய்யச் சொல்லி ‘இவர்’ சொல்லி அனுப்பியிருக்கிறார்.
எப்படியும் என் பேச்சை நீங்கள் தட்டி நடக்கமாட்டீர்கள் என்று கூறிவிட்டு வந்திருக்கிறேன். என் மதிப்பு உங்கள் கையிலேதான் இருக்கிறது.
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன், மறந்துவிடாதீர்! இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்.
என்று இச்சகம் பேசியும் நச்சரித்தும், ஏற்கனவே கொண்டுள்ள நினைப்பை மாற்றிக்கொள்ளச் செய்வதிலே தனித் திறமை பெற்றவர்கள், தேர்தல் சமயத்திலே சுறுசுறுப்படைகிறார்கள்.
★