உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

‘ஐயாவோட குழந்தை’ என்ற நிலையிலிருந்து ‘ஐயா’ ஆகிவிட்ட நிலை, சீமானுடைய மகன் வளர்ந்துவிட்டான் என்பதைத் தெளிவாகக் காட்டும் அளவுக்கு அவன் ஐயா வேலை பார்ப்பதற்குத் தேவையான தகுதியையும் திறமையையும் பெற்றுவிட்டான் என்பதைக் காட்டுவதில்லை. தகுதியும் திறமையும் பெற்றிருக்கக்கூடும், அல்லது மாளிகையும் மாநிதியும் போதும், வேறு தகுதியும் திறமையும் தேடிப் பெற்றிட வேண்டுமோ என்று இருந்துவிட்டிருக்கக் கூடும்.

மாளிகையும் மாநிதியும் பெற்றிருப்பதே ஒருவிதமான தகுதிதானே – உலகம் அப்படித்தானே எண்ணுகிறது.

எஜமானர்! ஐயா! பெரியவர்! — என்ற இத்தகைய பட்டம் பல சூட்டப்பட்டவர் – சீமான் மகன் – இருபது வயது நிரம்பியவனாகவும், ‘எஜமானர்’ என்று பணிவுடன் அழைப்பவர் அறுபது வயதான முதியவராகவும் இருக்கக் கூடும்!

வயது இருபது என்றால் என்ன! இரும்புப்பெட்டி இருக்கிறதல்லவா? முதியவர் அந்த வாலிபனையா எஜமானரே! என்று அழைக்கிறார்; இரும்புப் பெட்டியையும் அதில் உள்ள எண்பது இலட்சத்தையும், கரும்புத் தோட்டத்தையும் அது காட்டும் கணக்கினையும்!!

தம்பி! இது ஏழ்மையின் விளைவு.

ஆனால், அரசியல் உலகிலே, ஒருவர் திடீரென ‘எஜமானர்’ ஆகிவிடும்போதும், இதுபோல ‘வளையும் நெளியும்’ கூட்டமொன்று கிளம்பிவிடக் காண்கின்றோம்.

உண்மையான அன்பு காரணமாக, எதையும் இழந்திட, எத்தகைய இன்னலையும் ஏற்றிடத் தயாராக உள்ள தூயவர்களைத் தொண்டர்களாகப் பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றிடும் தலைவர்கள் உளர்.

அந்தத் தலைவர்களை விடத் தூய்மை மிக்க அந்தத் தொண்டர்களே, பொதுவாழ்க்கைத் துறைக்கு உயிரூட்டம் தருபவர்.

நான், தம்பி! அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற நற்குணம் கொண்ட தூயவர்களைப்பற்றி அல்ல கூறுவது.