உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

சீமானான உடன் அவனை ‘எஜமானர்’ என்று கொண்டாடிடுவோர்போல, ஒருவர் அரசியலில் பெரிய பதவியில் இடம்பெற்றவுடன் அவர் முன்நின்று அவர் நாமாவளி பாடுகிறார்களே, அவர்களைக் குறிப்பிடுகிறேன்; துதி பாடகர்களை

துதி பாடகர்கள் வரம்வேண்டிப் புதிய தேவதை முன் வேண்டி நிற்பது மட்டுமின்றி மற்றவர்களிடம் மல்லுக்கு நிற்பதும் மற்ற எவரையும் மட்டமாகக் கருதி ஏசுவதும், தமது புதிய எஜமானருக்குத் திருப்தி தரும் என்ற நினைப்பில் இருப்பர்.

தன்னைப் பாராட்டிப் பேசுவதுடன், தனக்கு ‘ஆகாதவர்களை’க் கடுமையாக ஏசுசிறான் என்பதறிந்து அகமகிழ்ந்து, தட்டிக் கொடுக்கும் போக்கினர் உளர்.

‘தலைவர்’ மகிழ்ச்சி அடைகிறார், தட்டிக் கொடுக்கிறார் என்று தெரிந்தால், தூற்றும் பேர்வழிகளுக்குத் தெம்பும் துணிவும் பன்மடங்கு அதிகமாகிடத்தானே செய்யும். வசை பாடுவதிலே மும்முரமாக ஈடுபட்டுவிடுகின்றனர்! அதிலேயே ஈடுபட்டு ஈடுபட்டு, பிறகு வேறு எதற்குமே தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.

தம்முடன் உள்ளவர்கள் பிரச்சினைகளை விளக்க வேண்டும், வாதங்களைக் காட்டவேண்டும், புள்ளி விவரத்தைத் தரவேண்டும், பேச்சிலே பொருளும் பொறுப்பும் இருக்கவேண்டும், கண்ணியம் இருக்கவேண்டும் என்று விரும்பிடுவது, ஒரு தலைவரின் தரத்தை மட்டுமல்ல, பொதுத் தொண்டின் தரத்தையே உயர்த்தும்.

அதற்கு மாறாகத் தரம்கெட்ட பேச்சுக்குத் தலையாட்டுவதும் தட்டிக் கொடுப்பதும், தூபமிடுவதுமாக அந்தத் தலைவர் இருந்திடின், என்ன நேரிடும்? சாக்கடைச் சரக்கினை நாக்கிடைகொண்டு, உமிழ்வோரின் தொகை பெருகும், துணிவு வளரும். இன்று அதனைத்தான் காண்கிறோம்.

தேர்தல் நெருங்க நெருங்க, இழிமொழிகள் உமிழ்வோர் கும்பல் கும்பலாகக் கிளம்புவர். ஆந்தை அலுத்துவிட்டது கோட்டான் தோற்றுவிட்டது என்று கூறத்தக்க-

அ. க. 7—7