உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

விதமான ஒலி கிளம்பிடும்; காது குடைச்சல் எடுத்திடும் விதமாக. கவலையோ, கோபமோ துளியும் ஏற்படவிடக் கூடாது.

தரமற்றவர்கள், கீழ் நிலையில் உள்ளவர்கள் எதையோ பேசட்டும், எப்படியோ ஏசட்டும் அண்ணா! மேல் நிலையில் உள்ளவர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், தலைவர்கள் பீடத்தில் அமர்பவர்கள் இவர்களெல்லாமோ, இழித்தும் பழித்தும் பேசுவது, இட்டுக் கட்டிப் பேசுவது என்று கேட்கிறாய். கேள்வி, நியாயமானதுதான் தம்பி! ஆனால் சற்று அவசரப்பட்டுக் கேட்டுவிட்டாய்.

உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று யார் உனக்குச் சொன்னார்கள்.

தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று ஏன் கருதிக்கொள்கிறாய்.

பூமியின் கீழே, மிக மிகக் கீழே கிடைத்திடுகிறது வைரம்! உயரத்தில் அல்ல!! எனினும் வைரம் உயர்ந்த பொருள்!! கட்டுவீரியன் குட்டி! மரத்தின் உச்சாணிக் கிளையிலே போய் இருந்து கொண்டால், மிக உயர்ந்ததாகிவிடுமோ ஆகாதன்றோ!

உயரம்—தாழ்ந்த இடம்—மலை—மடு—சரிவு, —பள்ளத்தாக்கு—சம நிலம்—இவை, இடங்களின் அமைப்பைக் குறிக்கின்றன; தரத்தை அல்ல. ஆகவே உயர்ந்த இடம்— மேலான பதவி—இங்கு உள்ளவர்களெல்லாமோ, இழிமொழி பேசுவது என்று கேட்டுக் கவலைப்பட்டுக் கொள்ளாதே.

இடமும் இயல்பும் பொருந்தி இருந்துவிடுவது, இலட்சத்தில் ஒன்று இருக்கலாம்.

இடத்திற்குத் தக்க இயல்பு பெற்றிட முனைபவர், பதினாயிரத்தில் ஒருவராக இருக்கலாம்.

ஆனால், உயர இருப்பதனைத்தும் உயர்ந்தது என்று பொது இலக்கணமாக்கிடக் கூடாது.

உயர்ந்த இடத்திலுமா இப்படிப்பட்ட இயல்பினர் உள்ளனர் என்று கூறினால், பொருளுண்டு.