99
உயர்ந்த இடம் அடைந்தபிறகாவது, தமது இயல்பினைப் சிறந்ததாக்கிக் கொள்ளக்கூடாது, உயர்ந்த இயல்பினைப் பயின்று கொள்ளக்கூடாதா என்று கேட்கத் தோன்றும். அது நல்ல கேள்வி. ஆனால் நடைமுறை வேறுவிதமாக இருக்கிறதே, என்ன செய்ய!
வேறோர் விந்தை இதிலே என்ன என்றால், தம்பி! உயர்ந்த இடம் சென்ற காரணத்தாலேயே, ஒரு ‘துணிவு’ பிறந்துவிடுகிறது, எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம் என்று. நாமிருக்கும் இடமோ, மிக உயர்ந்த இடம், நம்மை யார் என்ன செய்யமுடியும், இந்த உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு எவரை என்ன கூறினாலும் அவர்கள் இடத்தின் உயர்வு கண்டு, அச்சம்கொண்டு, அடங்கிக்கிடப்பர்!— என்று எண்ணிக் கொள்ளும் போக்கு தடித்து விடுகிறது.
பெரும்பாலான மக்கள், உயர் இடம் சென்றுள்ளவர்களைக் கண்டதும், அச்சம் கொளவதும், அவர்களைப் போற்றிடத் துடிப்பதும், அவர்களின் பேச்சிலே புதுப்புதுப் பொருளும் பொலிவும் அருமையும் பெருமையும் இருப்பதாக எண்ணி மயக்கம் கொள்வதுமான நிலையில் உள்ளனர்.
உயர்ந்த இடம் செல்வதற்கு முன்பு அவரிடம் காண முடியாதிருந்த ‘அறிவாற்றலை’ உயர்ந்த இடம் சென்றதும், காண முற்படுகின்றனர்! இருப்பதாகவே கூறுகின்றனர்! நம்புகின்றனர்!
காமராஜர், தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தபோது அவரைப் போற்றிப் புகழ்ந்திட, தமிழ் நாட்டிலேயே கற்றோரும் மற்றோரும், கனதனவான்களும் புலவர் பெருமக்களும், அதிகாரிகளும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வணிகப் பிரமுகர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும், துடிதுடித்துக் கொண்டா திரண்டு வந்தனர்.
ஒரு பரிதாபம் கலந்த பரிவுகாட்டினர்.
போற்றிப் புகழ்ந்திட முன்வந்தார் இல்லை.
ஆனால், அந்த நிலையா இன்று? கற்றோரும் மற்றோரும் இன்று என்னென்னவோ அறிவாற்றலைக் காண்கின்றனர், காமராஜரிடம்! போற்றிடத் துடிக்கின்றனர்! படிக்காத