3
எடுத்துக் காட்டுகிறது அவர்களின் பேச்சு!—கழகத்தின் வளர்ச்சியின் அளவை நாடு உணர்ந்து கொள்ளவும் அந்தப் பேச்சு துணை செய்கிறது.
கழகமா? அது எங்கே இருக்கிறது என்று பேசிய காலம் போய்,
கழகமா? அதைப் பொதுமக்கள் சீந்துவார்களா என்று கூறிய காலம் போய்,
கழகமா? பத்துப் பேர் கூச்சலிடும் இடந்தானே என்று பரிகாசம் பேசிய காலம் போய்,
கழகமா! கொஞ்சம் துள்ளுகிறது, நாலு நாளில் தன்னாலே அடங்கிவிடும் என்று பேசிய காலம்போய்,
கழகமா? அது உட் குழப்பத்தாலே உருக்குலைந்து போய்விட்டது என்று பேசிய காலம் போய்,
கழகமா? அது உடைபட்டுப் போய்விட்டதே! இப்போது அதிலே என்ன இருக்கிறது!! என்று பேசிய காலம் போய்,
கழகமா? நாங்கள் மூச்சுவிட்டால் காற்றிலே பறக்காதா என்று ஏளனம் செய்த காலம் போய்,
கழகமா? எங்கள் கோபப் பார்வையாலேயே அதனைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட மாட்டோமா? என்று பேசிய காலம் போய்,
கழகமா? எங்களுக்கு அது ஒரு பொருட்டாகுமா! என் அலட்சியம் காட்டிப் பேசிய காலம் போய்,
கழகமா? அதை 67000 அடி ஆழமுள்ள குழி தோண்டி அல்லவா புதைக்கப் போகிறோம் என்று பேசும் காலம் வந்திருக்கிறதே!
இது எதைக் காட்டுகிறது? கழகத்தை அலட்சியப்படுத்தியவர்கள், அது தன்னாலே உருக்குலைந்து போகும், உடைபட்டுப் போகும் என்று எண்ணினவர்கள், கழகம் சாமான்யமல்ல, அதைப்போட்டுப் புதைப்பதானாலும், சாதாரணக் குழி போதாது, மிக மிக ஆழமான குழிவேண்டும் என்று கூறிட வேண்டிய அளவுக்குக் கழகம் வளர்ந்து, அவர்களைக் கலங்கிடச் செய்கிறதே, அது தம்பி! எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சியேகூடத் தருகிறது!