உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

காலஞ் சென்ற சத்தியமூர்த்தி சொல்லிக்கொண்டிருந்தார், ஜஸ்டிஸ் கட்சியை 5000 அடி ஆழத்தில் குழி தோண்டிப் புதைக்கப் போகிறேன் என்று.

இன்றைய காங்கிரஸ்காரர்கள் அவரை மிஞ்சி விட்டார்கள்; குழி தோண்டுவதில்! வாயால்! 67000 அடி ஆழக் குழியாம்.

அவ்வளவு கடினமான வேலை செய்யவேண்டும் என்றாகிவிட்டது, கழகம் பெற்றுள்ள வளர்ச்சி.

ஒன்றை மறந்துவிடுகிறார்கள்—கோபம் கண்ணை மறைக்குமாமே, அதனால் என்று எண்ணுகிறேன்—67000 அடி ஆழக் குழிதோண்டிக் கழகத்தைப் புதைக்கத் தக்க வல்லமை உள்ளவர்களானால், இந்த வீரர்கள் கழகம் இந்த அளவு வளர்ந்ததே, என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஏன் கழக வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை!!

கழகம் இவர்கள் கண்முன்பாகத்தானே வளர்ந்தது? வேறு எங்காவது ஓரிடத்திலே கட்டப்பட்டு இங்கு திடீரென ஒருநாள் கொண்டுவந்து இறக்குமதி செய்யப் பட்டதா? இல்லையே! இவர்கள் இப்போது இருப்பது போலவே அறிவாற்றலுடன், வீராவேச உணர்ச்சியுடன் இங்கேதான் இருந்து கொண்டிருந்தார்கள், நாம் வளர்ந்தபோது. ஏன் தடுக்க முடியவில்லை, கழக வளர்ச்சியை? வளர்ச்சியைத் தடுத்திட முடிந்திருந்தால் இன்று இத்தனை ஆழமான குழி தேவைப்பட்டிருக்குமா!! பாவம்! 67000 அடி ஆழமல்லவா தோண்டப் போவதாகச் சொல்லுகிறார்கள். ஏன் இத்தனைக் கஷ்டம்! தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது என்பார்களே, அந்தப் போக்கா?

இப்போது இருப்பது போலவே அவர்களிடம் எல்லா வல்லமையும் இருந்தது! பிரசாரம், பணபலம், அதிகார பலம், எல்லாம்! இப்போது இருப்பது போலவே அப்போதும்! இவர்களே ஆளவந்தார்கள்! இருந்தும்? கழக வளர்ச்சியைத் தடுத்திட முடிந்ததா? இல்லையே! கழகம் வளர்ந்து வளர்ந்து, இவர்களுக்கு மிரட்சி அதிகமாகி, ஆழமான குழி! மிக ஆழமான குழி! என்றல்லவா அலறுகிறார்கள்.

இவர்கள் வேறு முக்கியமான வேலையாக—அமெரிக்காவைச் சீர் செய்ய— புரட்சியால் இன்னல் அடைந்த