109
அன்பு காட்டுதல் வேறு, துதி பாடுதல் முற்றிலும் வேறு!
பின் பற்றுதல் வேறு, தொத்திக் கொள்ளுதல் என்பது வேறு. பாராட்டுதல் என்பது வேறு பல்லிளித்தல் என்பது முற்றிலும் வேறு; நோக்கம், விளைவு, தரம் எனும் எந்த முனையிலிருந்து பார்த்திடினும்.
ஒருவர் உயர் இடம் சென்றிடினும், அவர் கூறுவனவற்றினில் உள்ள உயர்வான கருத்துக்களைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும், போற்றிட வேண்டும்; பின்பற்றிட வேண்டும்; எல்லாவற்றையும் அல்ல.
சேற்றிலே இருந்திடினும் செந்தாமரை, செந்தாமரை தான்!
ஆனால், செந்தாமரை இருந்ததாலேயே, அந்தச் சேறுமா சந்தனமாகிவிடும்?
பேதையும் அதுபோலக் கூறிடானே!
தலைவராகி, நாட்டை நடத்திச் செல்பவராகிவிட்டார் காமராஜர் என்கிறார்கள். மெத்த மகிழ்ச்சி. ஆனால், அதனால், அவரிடம் இருந்து நாம் எதைப் பெற நினைத்திடவேண்டும்? மக்களுக்குத் தேவையான நல்லாட்சியை! அவருக்கு நாம் என்ன தரவேண்டும்? முகஸ்துதியையா? அவர் எட்டுடன் எட்டு பதினெட்டு என்று கூறிடின், ஆகா! இஃதன்றோ புதுமுறைக் கணக்கு! இதுநாள் வரை எவரும் கூறிடாத கணக்கு!—என்று வியந்து பாராட்டிடுவதுடன், மற்றவர்களும் மதிமயக்கம் கொண்டிடவேண்டும் என்று கூறி நிற்பதா?
துதி பாடகர்கள், புகழ் பாடிப்பாடி மகிழ்கிறார்கள்; அவரை மகிழ்விக்கிறார்கள். பிறகோர் நாள், ஏமாற்றம் தாக்கிடும்போது என்ன கூறுவர்? என்னென்ன புகழ்மாரி பொழிந்தேன்! எப்படி எப்படித் தூக்கி வைத்தேன்! என்னாலன்றோ எட்டாததெல்லாம் அவர் கரம் எட்டிற்று! பட்டுப்போக இருந்த மரம் துளிர்விட்டது! படர்ந்து போக இருந்த விளக்கு ஒளி பெற்றது! என்னென்ன புகழுரைகள் — பொழிந்தேன்! அர்ச்சனை விதவிதமாக! ஆராதனை பலப்பல! இதற்கு முன்பு வேறு ஒருவரும் செய்திடாத முறையில்! கண்டோர் வியந்திடும் வகையில்! ஆனால்... ... என்றல்லவா பேசிடுவர்.