110
பாடல் தெரியுமல்லவா தம்பி!
“கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்.”
துதிபாடகர்கள், தமது குரலொலியை அதிகமாக்கிக்கொள்வதன் மூலமாகவே, தமது இயல்பு யாது என்பதையும், நோக்கம் என்ன என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ளச் செய்துவிடுவதன்மூலம், நாளா வட்டத்தில் தமது தரம் தன்னாலே தாழ்ந்துபோவது காண்பர். அரசு பெரிது எனினும் கட்டியங் கூறுவோனின் நிலை, மட்டமானதுதானே!
எந்தக் கொலுமண்டபத்திலும் கைகட்டி வாய்பொத்தி நின்றுமட்டுமே பிழைக்கும் வழியைப் பெறமுடியும் என்ற நிலையில் இல்லாத அறிவாளர்கள்—பல்வேறு துறைகளிலே வித்தகர்களாக உள்ளவர்கள்—துதிபெற்று நிலை உயர்ந்து ஒருவர் நெறித்த புருவத்தினராகிறார் என்ற உடன், நமக்கென்ன என்று இருந்துவிடாமல், நாலுபேர் செல்கிற வழியில் நாமும் செல்வோம் என்று தாழ்ந்துவிடாமல், உண்மையை எடுத்துரைத்திட முன்வந்திடவேண்டும். பெரிய நிலையில் உள்ளவர்கள், தவறான கருத்துக் கொண்டிடின், தவறான போக்கினை மேற்கொண்டிடின், அறிவு கொளுத்திட, இடித்துரைத்திட, தடுத்து நிறுத்திடத் தயங்கிடலாகாது. தயக்கம் காட்டிடின், மக்களாட்சி முறையின் மாண்பே மாய்ந்து போகும்.
நிலை உயர்ந்திடின் என்ன? நீதி எதனையும் விட உயர்ந்தது! உண்மையே அனைத்தினும் உயர்ந்தது! அந்த உறுதியுடன் ஒரு சிலர் நடந்து கொண்டிடினும் போதும், மெள்ள மெள்ள ஆனால் உறுதியாக, மக்களாட்சியின் மாண்பு வளர்ந்திடும்.
அமெரிக்கக் குடி அரசுத் தலைவர் ஜான்சன் அறிவாளர்களை, கலைஞர்களை, விஞ்ஞானிகளை போற்றுபவர்; ஆதரவு காட்டுபவர்; எனினும் வியட்நாம் பிரச்சினையில் மேற்கொண்டிடும் போக்கு தவறானது, ஆபத்தைத் தரத்தக்கது, அநீதி நிரம்பியது என்பதனை எடுத்துரைக்க, கண்டித்திடப் பேரறிவாளர் துளியும் தயங்கினார்களில்லை.
அஃது அவர்களின் நெஞ்சுரத்தையும் நேர்மைத் திறத்தையும் காட்டுகின்றது.