உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

அஃது முதலில் ஜான்சனுக்குக் கோபத்தைக் கூடக் கிளறிவிட்டிருக்கக்கூடும்! பிறகு அவரேகூட அவர்களின் நேர்மையை வியந்து பாராட்டிடத்தான் செய்வார்.

அரசாளும் முறை, சட்டமியற்றும் முறை, பொருளாதார முறைகள் என்ற பலவற்றிலே, குறை உள; அறிந்தோர், அதனை மற்றையோர்க்கு அறிவித்திட அஞ்சலாமோ? அரசாளும் நிலைபெற்றோர்க்கு எச்சரிக்கை தந்திடாது இருந்திடப்போமோ?

துதிபாடகரின் புகழ் கேட்டுக் கேட்டு மயக்கம் மேலிட்ட நிலையில் உள்ளவர்கள், எவரேனும் தமது முறையில் குறைகண்டு கூறிடின் கொதித்தெழுவர். ஆம்! ஆனால்? கூறாது இருந்திடின்? மக்களுக்கு அல்லவா பெருந்தீங்கு செய்தவராவர்!

இந்தத் தயக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, ஆட்சி முறையிலே காணப்படும் கேடுகளைக் கண்டித்திட, நல்லறிவு தந்திட, பலர் இன்று முன்வருகின்றனர். மகிழ்ச்சி!

ஐந்தாண்டுத் திட்டம் – நாணய மதிப்புக்குறைப்பு —போன்றவைகளிலே நெளியும் குறைபாடுகளை, அமெரிக்காவின் பிடி வலுவாகிக்கொண்டு வருவது, உணவுப் பிரச்சினையிலே நெருக்கடி நீடிப்பது போன்ற பிரச்சினைகளிலே, பல்கலைக் கழகப் பேராசிரியர் பலர் தெளிவான கருத்தையும், துணிவான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியினராக இருந்தும் முன்னாள் அமைச்சர், க. சந்தானம் அவர்கள் இந்தத் துறையிலே பாராட்டத்தக்க பணியாற்றி வருகின்றார்கள்.

துதிபாடகர்கள் கிளப்பிடும் ஒலியில், இவர்களின் குரல் வெளியே தெரியவிடாமல் செய்யப்பட்டு விடுகின்றது; என்றாலும் இவை மூலம் மக்கள் தெளிவு பெற்றுக்கொண்டு வருகின்றனர்.

நிலை கண்டு நடுங்கி உண்மையைக் கூறிடத் தயங்குவது பெரும்பாலோருக்கு இயல்பு: சிலரேனும் அந்த இயல்பினை நீக்கிக்கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிக் குரியது.