உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

ஏற்பட்டது. அவர்கள் எல்லோருமே, கதருடையினர், காங்கிரஸ்கட்சியினர். எனவே ஒவ்வொருவரும் தமது நினைப்பே சரி என்று கருதுகிறார் – அந்த நினைப்பின்படி நாடு ஆளப்பட்டால்தான் நன்மை கிடைக்கும் என்று எண்ணுகிறார். அந்தமுறைதான் காங்கிரசின் உண்மையான திட்டம் என்று கருதுகிறார். இது, மக்களை மருளச்செய்யும் முறை—வாழவைக்கும் முறையல்ல! என்பதுபோல், எல்லோரும் ஒரே கட்சியின் பெயரைக் கூறிக்கொண்டு சென்றவர்களே தவிர, அவர்களில், பலவகையினர் உண்டு —அவரவர்களின் திறமைக்கு ஏற்றபடி பலனையும் தேடிக்கொள்கிறார்கள்.

கலெக்டரையும் கன்ட்ரோல் ஆபீசரையும் மிரட்ட, கதர் பயன்படுகிறது, போதாதா இது என்று எண்ணிப் பூரிக்கும் ‘புண்ணியவான்கள்’ மிகுந்துவிட்டனர், மந்திரிகளை மடியில் வைத்திருக்கிறேன்— கவர்னரைக் கைக்குள் வைத்திருக்கிறேன்— பக்தவத்சலம், என்னைப் பார்க்காவிட்டால் தூங்கமாட்டார் அவ்வளவு பிரியம் என்னிடம் என்று அதுபோன்ற பலவகைப் பேச்சுப் பேசி, மிரட்ட, மயக்க, பயிற்சி பெறும் அளவுக்கு, பிரச்சினைகளை விவாதிக்க, திட்டங்களைத் தீட்ட, மசோதாக்கள் தயாரிக்க, பயிற்சி பெற்றனரா என்று யோசித்தால் நேர்மையுள்ள எந்தக் காங்கிரஸ்காரரும் வெட்கமும் துக்கமுமடைய வேண்டியதுதான்; பண்பற்றவர், பயிற்சியற்றவர், பொறுப்பை மறந்தோர், பொதுமக்களைக் காணாதார், அக்கறையற்றவர், ஆள் விழுங்கிகள், இச்சகம் பேசுவோர், உருமாறிகள் என்று இவ்விதமாக ஒரு பட்டியலே தயாரிக்கலாம், ஆளவந்தோம் என்று கூறிக்கொண்டவர்களை. இது மக்களாட்சி முறையல்ல—கட்சிப்பற்று காரணமாக இந்த நிலையை வளரவிடுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி எவ்விதமான முறையிலே மாறிவிட்டது என்பதையும், எத்தகைய போக்கினர்களெல்லாம் அதிலே இருந்து வருகின்றனர் என்பதையும், எப்படிப்பட்ட சுயநலக்காரரெல்லாம் இடம் பிடித்துக்கொண்டு, இலாபவேட்டை ஆடுகின்றனர் என்பதையும் உணர்ந்து, மனம் வெதும்பி, காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டவர் பலர்! என் நண்பரும் அதுபோல ஆகவேண்டியவர்; அவர் மட்டுமா! வேறு பலரும் உளர்.