நேருவின் இந்த மணிமொழியை உணர இயலாமல், கிளர்ச்சிகள் மூண்டுவிடுகின்றன—மூட்டிவிடப்படுவன அல்ல—என்பதை அறியாமல், சுட்டுத் தள்ளினால் மக்கள் சுருண்டு பிணமாகக் கீழே விழுந்தால், சமுதாயம் அடங்கிப் போய்விடும் என்று கருதிக்கொண்டு, சுட்டுத் தள்ளுகிறார்கள்.
ஆமாம்! ஐம்பது பேர் சுட்டுத்தள்ளப்பட்டார்கள்!! என்று அவருடைய ஆயுட் காலத்திலேயே இதனை விடப் பெரிய சாதனை இல்லை என்று கருதுபவர்போலப் பேசினாரல்லவா பக்தவத்சலனார்—“பாறைபோல நின்றவர்”— அந்த நிலை எதைக் காட்டுகிறது?
சுட்டுத்தள்ளிக் கிளர்ச்சியை ஒடுக்குவோம் என்று இவர்கள் கொண்டுள்ள உறுதியை.
ஆகவேதான் தம்பி! 67,000 அடி ஆழமுள்ள குழி தேவைப்படுகிறது.
கழகத்தைப் போட்டுப் புதைக்க என்று பேசினார்களே தவிர, அத்தனை ஆழமான குழி தோண்டப்பட வேண்டும் என்று அவர்கள் எண்ணுவதற்குக் காரணம், அவர்கள் குழியில் போட்டுப் புதைத்துவிட விரும்புபவை, கழகம் மட்டுமல்ல, வேறுபல உள!
காந்தீயம்
ஜனநாயகம்
அறநெறி
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள்,
கிளர்ச்சியை ஒடுக்க வீழ்த்தப்பட்டவர் பிணம்!
இவ்வளவும் இருப்பதால்தான் அவ்வளவு ஆழமான குழி தோண்ட வேண்டும் என்று தோன்றுகிறது போலும்.