உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

மறுநாள் போடி, மற்றோர் நாள் சேலம், பிறிதோர் நாள் ஈரோடு என்றமுறையில் சுற்றிச் சுழல்பவர்கள். உடலிலே அலுப்பு ஏற்படும் என்பதனை எடுத்துக்காட்ட இதனைக் கூறிடவில்லை; ஓய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு நிம்மதியாகச் சிந்தித்து இதழினுக்குச் சுவைகூட்டிடும் நிலையில் உள்ளவர்கள் அல்லர் என்பதனை எடுத்துக் காட்டத்தான்.

பிற இதழ் நடாத்துவோர் போல, இதனையே தமது முழு நேர வேலையாகவோ, முதல் வேலையாகவோ கொண்டவர்கள் அல்லர்.

கழக இதழ் நடாத்துவோர் மேற்கொண்டுள்ள பணி, ஒரு புத்தரசு காண்பது; அதற்குத் தக்கவிதமான பாசறையாகக் கழகத்தை வலிவுள்ளதாக்குவது.

அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேடிக்கொள்ளும் படைக்கலன்களில் ஒன்று, இதழ்!

அந்தப் படைக்கலன் வண்ணம் மிக்கதாக விளங்கிடச் செய்திட வேண்டுமே என்பதிலே மட்டுமே தம்மை ஈடுபடுத்திக்கொள்ள இயலாத நிலையினர்.

ஆனால், அதேபோது அந்தப் படைக்கலன், பயன் தரத்தக்கதாக இருந்திட வேண்டும் என்பதிலே கண்ணுங் கருத்துமாக உள்ளவர்கள்.

இந்தநிலை காரணமாகவே இதழில் எழிலினை மிகுதியாக்கிட, கண்களைக் கவரத்தக்க வடிவம் கொடுத்திட முடிவதில்லை.

இதழ் நடத்துவது ஒன்றை மட்டுமே மேற்கொண்டிடின், எழில் ஏடு என்று எவரும் வியந்து பாராட்டிடத்தக்க முறையினில், நமது கழகத்தோழர் எவரும் இதழ் நடாத்திடலாம். இயலாத ஒன்று அல்ல! ஆனால், நாம் மேற்கொண்டுள்ள பணியின் அளவும் தன்மையும் நம்மை ஏட்டுக்கு எழிலூட்டும் வேலையிலே மட்டுமே நாம் பிணைந்துவிட இடம் தருவதில்லை.

இந்த நிலையிலும், கூடுமான வரையில், இதழிலே பொலிவு விளங்கிடச் செய்வதில், இளங்கோவன் ஈடுபட்டு, ‘காஞ்சி’ இதழினுக்கு ஒரு கவர்ச்சி கிடைத்திடச் செய்து