20
வருவதனைப் பலர் பாராட்டிடக் கேட்டு மகிழ்ச்சி கொள்கின்றேன்.
‘காஞ்சி’ இதழின் இந்த இரண்டாம் ஆண்டுமலர், எழில் மிகு வடிவம் பெற்றிட முனைந்து பணியாற்றி அனைவருக்கும் அகமகிழ்ச்சி அளித்திடுவதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருக்கும் நிலையினைக் காண்கின்றீர்கள்.
மலரில், இடம்பெற என்னிடமிருந்து கட்டுரைகளைப் பெறுவதென்பதே ஒரு தனிக்கலை! சற்றுக் கடினமான கலையுங்கூட!
கட்டுரைகளை—அதிலும் மலருக்கு என்று தனித்தன்மை வாய்ந்த கட்டுரைகளை—எழுதிட எனக்குக் கிடைக்கும் நேரமே, நள்ளிரவுக்கும் விடிவதற்கும் உள்ள நேரம்—அதிலேயும் கழகத் தோழர்கள் தங்கள் பிரச்சினைகளுடன் வாராதிருந்திடின்.
ஆனால் இந்த நிலையிலும் இதழ் மூலம் என் உடன் பிறந்தாருடன் தொடர்பு கொள்வதிலே எனக்குள்ள பேரார்வம், என்னை எப்படியோ பணிபுரியச் செய்கிறது.
ஒவ்வொன்றையும் கூறிவிட வேண்டும், கூறிடும் ஒவ்வொன்றும் முழு அளவினதாக இருக்கவேண்டும் என்ற துடிப்பு எனக்கு.
கூறித் தீர வேண்டியவைகளோ மிக அதிகம் அளவில்; அந்த அளவு வளர்ந்துகொண்டும் வருகிறது.
உலக நடவடிக்கைகளைப்பற்றி, உள்ளத்து எழும் உணர்ச்சிகளைப்பற்றி, ஊராள்வோர் போக்கு பற்றி, அதனை மாற்றியாக வேண்டிய முறை பற்றி, கூறிட ஆயிரம் உள.
பிரச்சினைகள் கூவிக் கூவி அழைக்கின்றன.
எந்தக் கருத்துக்கும் இனிமை சேர்த்திட, நான் உளேன் காண்க! என்று தமிழ் இலக்கியம் அழைக்கிறது.
ஆதிக்கத்தை எதிர்த்திடும் ஆற்றலை மக்களிடம் எழச் செய்திட வேறு எதுவும் செய்திட வேண்டாம், நான் உள்ளடக்கி வைத்துக் கொண்டுள்ள கருத்தோவியங்களைப் பார், அவைகளைப் பக்குவப்படுத்தித் தந்திடு, அது போதும் என்று வரலாற்றுச் சுவடி கூறுகிறது,