25
கழக ஏடுகளின் தனித்தன்மை எவ்வளவுக்கெவ்வளவு அதிக அளவில் உணரப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வேகம் நமது பயணத்திற்குக் கிடைக்கும்.
இந்தப் பணி சிறப்படைய வேண்டுமெனில், பறித்தெடுத்த சிரித்திடும் முல்லையைப் பெற்றுச் சூடிக்கொள்ள எழில் மங்கை இருந்திடவேண்டும் என்பது போல், வடித்தெடுத்த வாளினைக் கரம் கொண்டு களம் சென்றிடத் தகுதி மிகு வீரன் கிடைத்திட வேண்டும் என்பதுபோல, கழக ஏடுகளைத் தக்க ஆதரவு கொடுத்து வளர்ந்திடச் செய்வதுடன், பயன்படுத்திக் கொள்ளும் பக்குவம் உணர்ந்த பல்லோர் தேவைப்படுகின்றனர்.
அந்தப் பல்லோர், ‘காஞ்சி’ இதழினுக்கு ஊக்கமளித்து வருகின்றனர், தொடர்ந்து; தோழமையுடன். அவர்கட்கு நன்றி கூறிக் கொள்வதிலே மகிழ்ச்சி பெறுகின்றேன்.
‘காஞ்சி’ இதழுடன் தம்பி! உனக்கு ஏற்பட்டுள்ள அன்புத் தொடர்பு தெம்பு ஊட்டுவது மட்டுமல்ல, இதழின் எதிர்காலத்திற்கான ஒளியும் தந்திடுகின்றது.
போர்டில்லன் எனும் ஆங்கிலக்கவிஞன் கூறியதனை நினைவிற் கொள்ளுகிறேன்:
இரவுக்கு ஆயிரம் கண்கள்,
ஆனால்,பகலுக்கு ஒன்றே!
ஆயினும், சூரியன் மறைந்தால்
உலகத்தில் ஒளி இல்லையே!
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
ஆனால், நெஞ்சுக்கு ஒன்றே!
ஆயினும், அன்பு மறைந்தால்
வாழ்வில் ஒளி இல்லையே!