29
மொடாக் குடியன்—போதையிலே பேசினானா, நிதானத்தோட இருந்து பேசினானான்னுதான் கேட்கறேன்.
நீ ஒரு குறும்பு! பூஜாரி, நல்ல கட்டுகட்டா விபூதி பூசிக்கிட்டு, குங்குமம் அப்பிக்கிட்டு, சுத்தமா இருக்கறப்போ தான். பேசினாரு. நீ சொல்ற மாதிரியிலே இல்லே. அது கிடக்குது; பொறப்படுறதுன்னா பொழுதோட கிளம்பு.
அதைப் பத்தித் தான் யோசிக்கறேன்.....
அஞ்சாறு கல் தொலைவு நடக்க வேணுமே, கால் வலிக்குமேன்னு கவலை இருக்கும்......
அந்தக் கவலை கிடையாது—நான் என்ன, மேனா மினுக்கி வாழ்வு நடத்திக்கிட்டா இருக்கறேன், நடந்தா கால் கடுக்க? காடுமேடு சுத்தி உரம் ஏறினதுதான் காலு...... ஆனால்.....
போறதுக்குள்ளே இருட்டாயிடுமே, அதை எண்ணிப் பயப்படறயா.....
அட, அந்தப் பயம் எல்லாம் இல்லை போ! நான் என்ன, கழுத்திலே தொங்கத் தொங்கப் போட்டுக் கிட்டா இருக்கறேன், தங்கச் செயினு. உள்ளது, மூக்குத்தி–அதவும் பாட்டி போட்டுக் கிட்டு இருந்தது—பழசு—முழுசா பத்து ரூபா கூடப் போவாது.
வேறே என்ன காரணம், தயக்கத்துக்கு...?
அதென்னடி அப்படிக் கேட்டு விட்டே... நான் என்ன ஒண்டிக்கட்டையா, நினைச்ச உடனே பொறப்பட. வீடுன்னு ஒண்ணு இல்லையா, அதிலே தட்டு முட்டுச் சாமானு ஏதோ கொஞ்சம் இல்லையா? கொழந்தை இருக்குது, தத்தித் தத்தி நடக்கற வயசு. அதை என்னா செய்யறது...
கொழந்தைக்கு என்னா...வீட்டிலே இருக்குது; வயத்துக்குப் போதுமானது போட்டுவிட்டா...பங்காளி வீட்டிலே பார்த்துக் கொள்ள மாட்டாங்களா...?
நல்லாச் சொன்னயே ஒரு பேச்சு; நண்டு சுட்டு நரியைக் காவல் வைக்கற மாதிரி, என் கொழந்தைக்குக் காவலு, என்னோட பங்காளிகளா? அது போதுமே தலைக்குத் தீம்பு.