உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

சியல் கட்சி மட்டத்தில்—பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள தன்னலக்காரர்கள் — தருக்கர்கள் — தங்கள் மீது மக்களின் சீற்றம் பாய்ந்திடும், தங்கள் ஆதிக்கம் சாய்ந்துபடும் என்ற நிலை ஏற்படும்போது, காமராஜர்போல, செல்வாக்கினைப் பெற்றுக்கொண்டுள்ளவர்களை நாடுவர். அப்போது காமராஜர்கள், “பயப்படாதீர்கள் எதிரிகளை ஒழித்துக் கட்டுகிறோம்; உமக்கு ஒரு ஆபத்தும் வராதபடி பார்த்துக் கொள்கிறோம்” என்று பேசி தைரியம் அளிப்பார்கள்.

செய்வதற்கான இடத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்துகொண்டு, செய்து முடித்திட அந்த வலிவு பயன்படக் காணோம்; வீறாப்புப் பேசுகிறார்—மரண அடி கொடுப்பேன் என்பதாக. என்னமோ இவர் இத்தனைக் காலமாகப் போனால் போகட்டும் என்ற போக்கிலே இருந்தவர் போலவும், தி. மு. கழகம் வளர்ந்து போகட்டுமே என்று கருதி வாளா இருந்தவர் போலவும், இப்பொழுதுதான், கழகத்தை ஒழித்தாக வேண்டும் என்ற நினைப்பே வந்ததுபோலவும் எண்ணிக் கொள்ளச் சொல்லுகிறாரா?

முன்பாகிலும், கழகத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் காட்டிக் கொண்டிருந்தார்கள். ‘ஓட்டு’ கேட்கிறது, நாட்டை ஆள விரும்புகிறது என்பது பற்றி எமக்குக் கோபம் இல்லை. ஆனால், இந்தக் கழகம் நாட்டை அல்லவா பிளக்க விரும்புகிறது; பிரிவினை அல்லவா கேட்கிறது! இது பெரியதோர் ஆபத்தல்லவா? இதனை அனுமதிக்கப்போமா! அதனால் தான் இந்தக் கழகத்தை ஒழித்தாக வேண்டும் என்கிறோம். அறிக! அறிக!—என்று ஆர்ப்பரித்தனர்; கழகமோ, நாட்டைத் துண்டாடும் திட்டத்தை விட்டு விட்டது. மரண அடி கொடுக்க வேண்டும் என்று இப்போது ஏன் கூறவேண்டும்?

முன்பு, நாடு பிளவுபடாதிருக்கக் கழகத்தை ஒழித்திட வேண்டும் என்று பேசினர்.

இப்போது? கோபத்துக்குக் காரணம்?

பதவியைப் பறித்துக் கொள்ளத் திட்டமிடுகிறார்களே என்பதுதானே!

அதற்கான வலிவும் வளர்ச்சியும் பொது மக்கள் ஆதரவினால் கழகத்துக்குக் கிடைத்துக் கொண்டு வரு-