58
சினிமாப் படங்களைக் காங்கிரசின் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்த முனைவது, ஒருவகையில், கலை உலகின் வெற்றி, கலைஞரின் வெற்றி. நமக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திடவில்லையே என்பதால், அதனைக் குறைத்து மதிப்பிட, நாம் யாரும் ஏமாளிகள் அல்ல.
கலைஞர்களின் தோழமையையும் தொடர்பையும், குறைத்து மதிப்பிட்டவர்கள், கேவலமாகப் பேசியவர்கள் அவர்கள், நாம் அல்ல; இன்று அந்த தொடர்பு தக்க பலன் தரும் என்ற பூரிப்புடன் உள்ளவர்கள் அவர்கள்!! கலைஞர்களின் தொடர்புபற்றி மிகக் கேவலமாகக்காங்கிரஸ் தலைவர்கள் — பேச்சாளர்கள் மட்டுமல்ல—பெருந்தலைவர்கள் தாக்கியபோது தம்பி! நாம் நினைவுபடுத்தினோம், காங்கிரஸ் தூய்மையான விடுதலை இயக்கமாக இருந்தபோது நாடகத்துறை வித்தகர் விசுவநாததாசும், கொடுமுடி சுந்தராம்பாள் அவர்களும், வேறு கலைஞர்களும் காங்கிரசுக்காகப் பாடுபட்ட பான்மையை! அப்போதும்காங்கிரசின் பெருந்தலைவர்கள் கலைஞர்களை மதிக்க மறுத்தனர்; ‘கூத்தாடிகள்’ என்று கேவலமாகப் பேசினர்! இன்று? கலையின் வலிவை உணருகிறார்கள்! கலைஞர்களின் தொடர்பைப் போற்றுகிறார்கள்! வரவேற்கத்தக்க வெற்றி — கலை உலகுக்கு. படம் காட்டப் போகும் பாடம் இதுவே.
காங்கிரசின் சாதனைகளை இந்தப் படங்கள் எடுத்துக் காட்டுமாம். காட்டட்டும்; ஆனால், சர்க்காரைக் காங்கிரஸ் கட்சி நடத்திக்கொண்டு வருவதால், சர்க்கார் செய்திடும் சாதனைகள்பற்றி அணைக்கட்டுகளிலிருந்து ஆரம்பப் பள்ளிகள் வரையில் செய்தித்துறை தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகின்றதுவே—அவை போதாமலா, புதிதாகத் தேவைப்படுகிறது? விந்தைதான்! தரமாகவே அமைந்திருக்கிறது செய்தித்துறைப் படம்!
உருக்கமான குரலொலி கேட்கிறது, வறண்ட பூமி! வெடித்துக் கிடக்கும் வயல்கள்! துடித்திடும் மக்கள்! வானத்தை அண்ணாந்து பார்க்கிறார்கள்! கண்ணீர் வடிக்கிறார்கள்!!
உடனே ஒரு அணைக்கட்டுக் காட்சி! தண்ணீர் குபுகுபுவெனப் பாய்ந்தோடி வருகிறது!! பூமி குளிர்கிறது! பயிர் வளர்கிறது! இப்படி ஒரு இன்பக்காட்சி!