69
உணவுப் பிரச்சினை பற்றிய, ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்தின் போதும், என்னென்ன சாதிப்பதாகச் சொன்னார்கள்? இன்று அந்த முறையிலே இவர்கள் பெற்றுள்ள சாதனை எப்படிப்பட்டது? எலியைக் காட்டி, எமது வேலை முடிந்தது என்று சொல்லும் அளவுக்கு அல்லவா ஆகிவிட்டது!
இதுவரையில், ரூபாய்க் கணக்கிலே உணவுப் பொருள் விலைக்குக் (கடனுக்கு) கொடுத்துக் கொண்டு வந்த அமெரிக்கா, இனி டாலர்தான் தர வேண்டும் என்று சொல்லி நிர்ப்பந்தப்படுத்தும் நிலை வந்திருக்கிறதே. இது சாதனைக்குச் சான்றா?
கடன் கொடுக்கத் தயக்கமாக இருக்கிறது; ஏனெனில் கடனைத் திருப்பித் தந்திடும் சக்தி இந்தியாவுக்கு இருக்கிறதா என்பதிலே எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று ஜப்பானியப் பொருளாதார நிபுணர்கள் கூறிவிட்டிருக்கிறார்களே, இது சாதனைக்குச் சான்றா?
ரூபாயின் மதிப்பைக் குறைத்தாலொழிய நெருக்கடியைச் சமாளிக்க முடியாது என்று இவர்களே கூறி விட்டார்களே? சாதனைக்குச் சான்றா?
செல்வம் — வருவாய்—ஒரு சிலரிடம் சிக்கிக் கொண்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனரே—இது சாதனைக்குச் சான்றா?இல்லை! இல்லை! இல்லை!—என்று ஏழையின் இதயம் கூறுகிறது. இதை மாற்ற, அவர்களை மயக்கத்தில் ஆழ்த்த, வளைவுகள், வண்ணங்கள், உலாக்கள், உற்சவங்கள், பேரணிகள், முழக்கங்கள்! இவை போதாவென்று படங்கள்!!
புனுகு பூசுகிறார்கள், புண் மறையும் என்று!!
அதிலே மிகவும் மணமுள்ளது என்ற நினைப்புடன் காமராஜர் புகழ் பாடுகிறார்கள். அது போதும், மக்களை மயக்க என்று!