உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

கூறிடும் தர்மகர்த்தா தத்துவம் வாழ்க!—என்று வாழ்த்துகின்றனர். ‘சோடசோபசாரம் செய்யவும் சொர்ணாபிஷேகம் செய்யவும் முனைகின்றனர்! திருடர்களுக்கு நடுநிசி உழைப்பாளர் என்று சிறப்புப் பெயர் கொடுத்திடுவார் உண்டா? இல்லையல்லவா? அப்படி யாரேனும் துணிந்து கூறிடின், கூறுபவர் பெருந்தலைவர் வரிசையினராகவுமிருப்பின், ‘நடுநிசி உழைப்பாளிகள்’ திருவிழா அல்லவா கொண்டாடுவர்!

காமராஜர் நடத்தும் ஜனநாயக சோஷியலிச விழாவில், சீமான்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வதன் காரணம், தமக்கு மதிப்புமிக்க ஒரு பட்டத்தை– தருமகர்த்தா என்ற பட்டத்தைச் சூட்டினாரே, நம்மை எதிர்த்திடுவோரை அழைத்து, ஏமாளிகளே! இவர்களை யாரென்று எண்ணிக்கொண்டு எரிச்சல் கொள்ளுகிறீர்கள்? இவர்கள் தர்மகர்த்தாக்கள்! என்று கூறுவதன் மூலம், நமக்கு ஒரு எதிர்காலத்தை உறுதிப்படுத்தியிருக்கிறாரே! இவருக்கல்லவா விழா எடுக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

ஆனால், அவர்களும் உண்மையைக் கண்டறிய முனையவில்லை. இந்த ‘தர்மகர்த்தா’ தத்துவம் சாஸ்திரமாக, காப்பியமாக, கதையாக, கவிதையாக, எப்படிப்பட்ட மாமேதைகளால் முன்பு தரப்பட்டது! எவ்வளவு சடுதியில், எளிதாக ஏழை மக்கள் அதனை மறந்துவிட்டார்கள்! முன்பு தத்துவம் பேசியவர்கள், இன்றைய காமராஜரைக் காட்டிலும், பெரியவர்களல்லவா? அவர்களில் அருளாளர்கள் இருந்தனர்; கவிவாணர்கள் இருந்தனர்; புலமைமிக்கோர் இருந்தனர்; புவி எங்கும் உள்ள நிலைமைகளைத் தெரிந்த அறிவாளர்கள் இருந்தனரே! அவர்கள் அன்று பேசினர் தருமகர்த்தா முறை பற்றி பேசி? கேட்டனர், தலை அசைத்தனர்! ஆனால், மீண்டும் மீண்டுமல்லவா அறம் அழிந்துபட்டது, செல்வச் செருக்கு கொக்கரித்துக் கூத்தாடிற்று.

அகவலாகவும் வெண்பாவாகவும் அறுசீராகவும் பிறவகையினதாகவும், உரைநடையாகவும் உரையாடலாகவும், பேரறிவாளர்கள் எடுத்துக் கூறிவந்த தர்மகர்த்தா முறையினை — மிக எளிதான முறையில்,

அறம் செய விரும்பு