90
என்று நம் ஆன்றோர் சொல்லிவைக்கவில்லையா! அதனைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பதால் விளையப் போகும் பலன் என்ன?
செல்வவான்கள் தர்மகர்த்தாக்கள் என்ற பேச்சு, சமூகப் புரட்சி ஏற்படுத்தத் துணிவற்றவர்கள் நடத்திக் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு!
செல்வவான்களை தர்மகர்த்தாக்கள் என்று நாடாளும் பெரியவர்கள் கூறுவதைப் பயன்படுத்திக் கொண்டு முதலாளிகள் தங்கள் ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்திக் கொள்வர்.
பணம் சிலரிடம் குவிந்திருக்கும்போது அதனை தருமகர்த்தா முறை என்று பேசி, பூசி மெழுகுகிறார்கள். ஏராளமான நிலபுலன்களைத் தமதாக்கிக் கொண்டிருந்த ஜெமீன்தாரர்களை ஒழித்தபோது இந்தத் தர்மகர்த்தர் தத்துவம் எங்கே போய்விட்டிருந்தது?
ஐநூற்றுச் சொச்சம் சமஸ்தானாதிபதிகளின் பட்டத்தைத் தட்டிவிட்டபோது, இந்தத் தர்மகர்த்தா தத்துவம் ஏன் பதுங்கிக் கொண்டது?
பணக்காரர்கள் ஏழைகளுக்காகவே சொத்தைப் பயன்படுத்தும் தர்மகர்த்தாக்களாக உள்ளனர் என்ற தத்துவம், அரசன் ஆண்டவனின் பிரதிநிதி, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்ற தத்துவத்தோடு சேர்ந்து பிறந்ததாயிற்றே; அரசன் ஆண்டவனின் பிரதிநிதி என்ற தத்துவம் தகர்க்கப்பட்டுப் போனது போலவே, சீமான்கள் தர்மகர்த்தாக்கள் என்ற தத்துவமும் தூளாகிப் போகாமல் தப்பித்துக் கொள்ள முடியுமா?