91
பணக்கார ஆதிக்கத்தை ஏன் இன்னமும் விட்டுவைக்கிறீர்கள் என்று மக்கள் சீற்றத்துடன் கேட்கும்போது, அவர்களைச் சாந்தப்படுத்த காமராஜர்கள் இந்தத் தருமகர்த்தா தத்துவத்தைப் பேசிடலாம்.
பணக்காரர்களிடம் ஏழைகள் பகை உணர்ச்சி காட்டும் போது, அதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பணக்காரர், இந்தத் தருமகர்த்தா தத்துவத்தைப் பயன்படுத்திட முனையலாம்.
ஆனால், இதே தருமகர்த்தா தத்துவத்தை எடுத்துக் காட்டி ஏழை, பணக்காரனை அவனிடம் உள்ள செல்வத்தை ஏழைக்கு இதம் செய்திடச் செலவிடும்படிக் கேட்க முடியுமா? கேட்டிடின், பணக்காரர்கள் தருமகர்த்தா தத்துவத்தின்படி நடந்துகொள்ள முன்வருவார்களா? வரமாட்டார்கள்! சீறுவர்! கொதித்தெழுவர்.
காமராஜர் பேசிடும் தருமகர்த்தா தத்துவத்தை நம்பிக் கொண்டு ஏழையர், செல்வர்களை அணுகி, ஐயன்மீர்! உலவிடும் மாளிகையும் அதிலுள்ள பெருநிதியும், வயலும் வளமும் அணிவனவும் பெறுவனவும், உம்முடையதன்று; எமக்காக உம்மிடம் ஒப்படைத்த செல்வமேயாகும்; நீவிர் எமக்காக இறைவனால் தருமகர்த்தா ஆக்கப்பட்டவர். எனவே, எடும் செல்வத்தை, கொடும் ஏழையர் துயர் போக்க என்று கேட்டிடின், என்ன கிடைத்திடும்?
தடியடி
சிறை
துப்பாக்கிச் சூடு!