உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

இந்தியைப் புகுத்தி தமிழரை நாசமாக்காதீர்கள், ஆங்கிலமே இருக்கட்டும், என்ற தம்முடைய திட்டத்துக்குப் பெரியாருடைய கையொப்பத்தை வாங்கியரும் அவரேதான்!!

ஆச்சாரியார் எப்படிப்பட்ட குணத்தவர் என்பதற்காக இதைக் கூறவில்லை.

கட்டாய இந்தியைப் புகுத்தி, பெரியாரையும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொண்டர்களையும், சிறையில் போட்டு வாட்டி வதைத்து, தாலமுத்து நடராசன் எனும் இரு இளைஞர்களின் உயிரையும் குடித்து, கையில் கிடைத்ததைக் கொண்டு அடிப்பேன்! என்று கொக்கரித்துக் கோலோச்சிய ஆச்சாரியார், எங்களை எல்லாம் அழைத்து, அனைவரும் கூடி ஆங்கிலம் கேட்போம் வாரீர் என்று பேசினாரே, இது எத்தகைய விந்தை, எங்களுக்கு எத்துணை பெரிய வெற்றி, என்பது பற்றிப் பேசிட அல்ல, இதனைக் கூறுவது.

இந்தி ஆதிக்கம் புகுத்தப்பட்டபோது, எதிர்த்திட இவர் முன்வரவில்லை; மனம் இல்லை; மாறாக இவரே அந்த ஆதிக்கத்தைப் புகுத்த முனைந்து நின்றார்; எதிர்த்தோரை அடக்குமுறை கொண்டு தாக்கினார்.

காலங்கடந்து கருத்து மலர்ந்தாலென்ன, கருத்து மலர்ந்தது என்பதிலே மகிழத்தானே வேண்டும், என்று கேட்பாய், தம்பி நான் அவர் ஏன் அப்போது அப்படிச் செய்தார், இப்போது ஏன் இவ்விதம் செய்கிறார் என்று கேட்கவில்லை; நான் சொல்வது, இப்போதும் அவர், செய்யவேண்டியதை செய்யவேண்டிய முறைப்படி செய்யவில்லை என்கிறேன்!

இப்போதும் அவர், காங்கிரஸ் மேலிடத்தில், இதுபற்றி வாதாட, போராட, காங்கிரஸ் இதற்கு இணங்க மறுத்தால், மக்களைத் திரட்டி, அந்தப் போக்கை எதிர்த்திட முன்வரவில்லை!

அதனால் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளைத் தாங்கிக்கொள்ளும் துணிவு பெற மறுக்கிறார்!

அன்று அனைவரையும் கூட்டிவைத்து, அருமையாக விளக்கமளித்தார்!

விளக்கத்தில், அருமைப்பாடு இருந்தது. ஆனால் அதற்குத் தேவை இருந்ததா என்றால்; இல்லை என்பதை அங்கு கூடியிருந்தோரின் பெயர்ப்பட்டியலைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.