128
திடும் விடுதலைப் போர் நடத்த அஞ்சுகிறார்கள், அந்த அச்சத்துடன், காங்கிரஸ் மேலிடத்தைப் பகைத்துக்கொள்ளாமலிருந்தால், பசையும் ருசியும் இருக்கிறது என்பதைச் சொந்த அனுபவ மூலம் தெரிந்துகொண்டிருக்கிறார்கள், எனவே ஆசையும் அவர்களை ஆட்டிப்படைக்கிறது.
எனவேதான், தம்பி, ஆசைக்கும் அச்சத்துக்கும் ஆட்படவேண்டிய நிலையில் இல்லாத நாம், துணிந்து, தூய உள்ளத்துடன், நமது வசதிக்கும், நமக்கு மக்கள் அளித்திடும் வாய்ப்புக்கும் ஏற்ற முறையில், தாயகத்தின் தன் மானம் காத்திடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நாம், தகுதியற்றவர்கள், என்று கூறுவாருளர். அந்தச் சுடுசொல், நமக்குக் கோபமூட்டக்கூட இல்லை—அந்தக் கட்டத்தையும் கடந்துவிட்டோம், மேலும் தகுதி பெற வேண்டும் என்ற ஆர்வத்தை நமக்குள் தூண்டிவிடவே, அந்தத் தூற்றலெல்லாம் பயன்பட்டு வருகிறது.
பெரும் பெரும் தலைவர்கள், துணிவுபெறாமல் தடுமாறிடக் காண்கிறோம்; டில்லியை எதிர்த்து நிற்க முடியாது என்று எண்ணி மருண்டிடக் காண்கிறோம்; கண்ட பிறகும், நாம் நமது பணியினைக் கலங்காது செய்து வருகிறோம்.
அவர்களின் தடுமாற்றத்துக்கு உள்ள காரணம் புரிகிறது. நாம் மேற்கொண்டுள்ள பணியின் தூய்மையும், தெரிகிறது.
நாம், அவ்வளவு பெரிய பணிக்கு ஏற்றவர்கள்தானா என்ற ஐயப்பாடுகூட எழக்கூடும்—விடுதலைப் போர் சாமான்யமானதல்ல.
என்றாலும், நம்பிக்கையுடன் பணியாற்றுகிறோம், மேதைகள் மருண்டோடுகிறார்கள்; நாமாவது, இந்த நற்காரியத்துக்கு நம்மை ஒப்படைத்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் பணியாற்றி வருகிறோம்.
அந்தப் பணியிலே ஒரு சிறு பகுதி—சுவையும் சூடும் மிகுந்த பகுதி — தேர்தல்.
ஆய்வுக் குழுவினர், தமிழகமெங்கும் சென்று, தோழர்களைக் கண்டு பேசிவிட்டு வருகின்றனர்—அவர்களிடம், நான் கேட்டுப் பெறும் கருத்துரைகளை, தம்பி, உன்னிடம் கூறி மகிழ்ந்திட உள்ளம் துடிக்கிறது—இப்போது உறக்கம் மேலிடுகிறது, மணி விடியற்காலை நாலு.
28—10—56
அன்பன்,
அண்ணாதுரை